தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய அணியில் 2 மாற்றம் - வெளியான தகவல்
- கில் 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
- முதல் டெஸ்டில் இடம் பெற்ற அக்ஷர் படேல் 2-வது டெஸ்டில் கழற்றி விடப்பட உள்ளார்
கவுகாத்தி:
தென் ஆப்பிரிக்க கிரிக் கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்தது. 124 ரன் இலக்கை எடுக்க முடியாமல் 93 ரன்னில் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை அசாம் மாநிலம் கவுகாத்தியில் தொடங்குகிறது. இப்போட்டி நாளை காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
கழுத்து வலியால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று அணிக்கு திரும்பியிருக்கும் இந்திய கேப்டன் சுப்மன் கில் 2-வது டெஸ்டில் ஆடமாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. அவர் உடனடியாக களம் கண்டால், கழுத்து வலி பிரச்சினை மேலும் அதிகமாக வாய்ப்புள்ளது என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவர் 2-வது டெஸ்டில் விளையாடமாட்டார் என்றும், துணை கேப்டன் ரிஷப் பண்ட் அணியை வழிநடத்துவார் என்றும் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கில்லுக்கு பதிலாக சாய் சுதர்சன் இடம் பெற வாய்ப்புள்ளது.
அதேபோல அக்ஷர் படேலுக்கு பதிலாக நிதிஷ் குமார் அணியில் இடம் பெறுவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களம் இறங்குகிறது. வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.