விளையாட்டு
பிரதமர் மோடி, இந்திய பேட்மிண்டன் அணி வீரர்கள்

இந்திய பேட்மிண்டன் அணியினருக்கு பிரதமர் மோடி நேரில் பாராட்டு

Published On 2022-05-22 07:37 GMT   |   Update On 2022-05-22 07:37 GMT
தாமஸ் கோப்பையை இந்தியா வென்ற பிறகு பேட்மிண்டன் விளையாட்டை நாடு கவனிக்கிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி:

தாய்லாந்தின் பாங்காங் நகரில் நடைபெற்ற தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் 14 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேசிய அணியை வீழ்த்தி இந்திய ஆண்கள் அணி தங்கப் பதக்கம் வென்றது.

வரலாற்று சாதனை படைத்த இந்திய அணியினருக்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் டெல்லியில் இன்று பிரதமர் மோடியை இந்திய பேட்மிண்டன் வீரர்கள் சந்தித்தனர்.

இதேபோல் உபேர் கோப்பையை வென்ற இந்திய மகளிர் பேட்மிண்டன் வீராங்கனைகளும் பிரதமரை சந்தித்தனர்.

அப்போது பேசிய பிரதமர், நீங்கள் செய்துள்ளது சிறிய சாதனை அல்ல என்றார். ஒட்டுமொத்த அணிக்கும் தேசத்தின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

எங்களால் முடியும் என்ற மனப்பான்மை இன்று நாட்டில் புதிய பலமாக மாறியுள்ளதாகவும், வீரர்களுக்கு அரசு அனைத்து ஆதரவையும் வழங்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்பு மக்கள் இந்த போட்டிகளை ஒருபோதும் பொருட்படுத்தவில்லை, ஆனால் தாமஸ் கோப்பை வெற்றிக்கு பிறகு பேட்மிண்டன் விளையாட்டை நாடு கவனித்து வருகிறது என்றும் பிரதமர் தெரிவித்தார். 

அப்போது பேசிய இந்திய பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், உலகில் வேறு எந்த விளையாட்டு வீரரும் இதைப் பற்றி பெருமையாக சொல்ல முடியாது, நான் மிகவும் பெருமையுடன் சொல்ல முடியும், வெற்றி பெற்ற உடனேயே உங்களிடம் பேசும் பாக்கியம் எங்களுக்கு மட்டுமே கிடைத்தது  இதற்கு மிக்க நன்றி என்று தெரிவித்தார்

பிரதமருடனான சந்திப்பு குறித்து பின்னர் பேசிய இந்திய பேட்மிண்டன் அணியின் தலைமை பயிற்சியாளர் கோபிசந்த், இந்திய வீரர்களையும், விளையாட்டையும் பிரதமர் கவனித்து வருகிறார். அவரது எண்ணங்கள் வீரர்களுடன் இருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags:    

Similar News