விளையாட்டு
டோனிக்கு ரசிகர் எழுதிய கடிதம்

டோனிக்கு ரசிகர் எழுதிய உணர்ச்சிமிகு கடிதம்- இணையத்தில் வைரல்

Published On 2022-05-19 10:21 GMT   |   Update On 2022-05-19 10:21 GMT
இந்த கடிதத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஃபிரேம் செய்து வெளியிட்டுள்ளது.
சென்னை:

நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக விளையாடி தொடரில் இருந்து வெளியேறியது. கடந்த ஆண்டு 4-வது முறையாக கோப்பையை வென்ற சென்னை அணி, இந்த தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 9-வது இடத்தில் உள்ளது.

சென்னை அணியின் புதிய கேப்டனாக இந்த ஆண்டு பொறுப்பேற்ற ஜடேஜா தனது பதவியை துறந்தார். பின் அவர் தொடரில் இருந்தும் வெளியேறினார். முன்னாள் கேப்டன் டோனி மீண்டும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இருப்பினும் தொடரில் இருந்து வெளியேறியதால் சென்னை அணி வீரர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர் ஒருவர் டோனிக்கு உணர்ச்சிமிகு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

இருளாக இருக்கும்போது நீங்கள் ஒளியை கொண்டு வருவீர்கள். நாம் அனைவரும் வேறுபாடு கொண்டவர்களாக இருக்கலாம். ஆனால் நீங்கள் எங்களது வாழ்க்கையை ஒன்றாக இணைத்துள்ளீர்கள்.

நீங்கள் சிறப்பாக ஆடும்போது நான் சிறப்பாக ஆடியதுபோல் உணர்கிறேன். நீங்கள் தொல்வியடையும்போது நானும் தோல்வி அடைகிறேன். நீங்கள் உணர்ச்சியை வெளிகாட்ட மாட்டீர்கள். ஆனால் நான் உங்கள் போட்டியின்போது சிரிக்கிறேன். அழுகிறேன். சண்டையிடுகிறேன். கொண்டாடுகிறேன்.

உங்கள் கிரிக்கெட் வாழ்வு, எனது வாழ்வில் ஒரு அங்கம்.  கிரிக்கெட் வீரராகவும், ஒரு மனிதராகவும் நீங்கள் எனது வாழ்க்கையை தொட்டிருக்கிறீர்கள்.

டோனி என்ற மனிதர் எனக்கு நிறைய கற்றுத்தந்திருக்கிறார். உங்களை யாராவது சந்தித்தால் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.  

சாதனைகளுக்கு அப்பால் உங்களை கண்டபோதுதான், நான் உங்களின் தொண்டன் ஆனேன். நீங்கள் எனது அதீத மகிழ்ச்சியாகவும், அதீத சோகமாகவும் இருக்கிறீர்கள்.

16 வயதாகும் நான் நீங்கள் நேர்காணலில் பேசியதை என்றும் நினைவில் வைத்திருப்பேன். அடக்கமாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும் என்பதையும், அவமானங்களை தாங்கிக்கொண்டு, சாகசங்களை கணக்கிட்டு எதிர்கொள்வது தான் வெற்றிக்கு வழி வகுக்கும் என்பதையும் உங்களிடம் இருந்து தான் தெரிந்துகொண்டேன். 

அந்த நாளில் தான் என் வாழ்க்கை மாறியது. உங்களுடைய தன்மை எனக்கு 7 சதவீதம் இருந்தால் கூட நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் ஆவேன். இந்திய கிரிக்கெட்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் வரை நீங்கள் செய்த சாதனைகளுக்கு நான் நன்றி சொல்லாத நாளே இல்லை.

எனது அருமை கேப்டன் அவர்களே, உங்களை போல் யாரும் இல்லை.

இப்படிக்கு, உங்கள் வாழ்நாள் தொண்டன்.

இவ்வாறு கடிதத்தில் எழுதியிருந்தார். 

இவற்றை படித்துவிட்டு டோனி, சிறப்பாக எழுதியுள்ளீர்கள் என கையெழுத்திட்டுள்ளார். இந்த கடிதத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஃபிரேம் செய்து வெளியிட்டுள்ளது.
Tags:    

Similar News