விளையாட்டு
ஆறு உலக கோப்பையில் பங்கேற்று இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் சாதனை
இதன் மூலம் அதிக உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஜாவேத் மியாண்டட் ஆகியோருடன் மிதாலி ராஜ் இணைந்துள்ளார்.
நியூசிலாந்தில் நடைபெறும் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று பிஸ்மாக் மரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு வருகிறது.
இந்த போட்டியில் பங்கேற்றதன் மூலம் இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். அதாவது 6 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
39 வயதான மிதாலி ராஜ், 2000 ஆம் ஆண்டில் தனது முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடினார்.
இதை தொடர்ந்து 2005, 2009, 2013, 2017 மற்றும் தற்போது நடைபெறும் 2022 உலக கோப்பை என மொத்தம் 6 உலக கோப்பை போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார்.
இந்திய வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே 6 உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதேபோல் பாகிஸ்தான் வீரர் ஜாவேத் மியாண்டட்டும் 6 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
இந்த சாதனை பட்டியலில் தற்போது இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் இணைந்துள்ளார்.