விளையாட்டு
சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் - தூத்துக்குடியில் வரவேற்பு
நேபாள நாட்டில் நடைபெற்ற போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் 3 தங்கம் மற்றும் 1 வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியிருந்தனர்.
தூத்துக்குடி:
பிட் இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக மத்திய விளையாட்டுதுறை அமைச்சகம் கடந்த மாதம் தேசிய அளவிலான குத்துசண்டை போட்டியை நடத்தியது.
இதில் வெற்றி பெற்றதன் மூலம் தூத்துக்குடி மாவட்டம் அய்யனடைப்பு கிராமத்தை சேர்ந்த தினேஷ் மோகன், ஆகாஷ் குமார், சிவகாசியை சார்ந்த சந்தணகுமார், மதுரையை சேர்ந்த பாலாஜி ஆகியோர் சர்வதேச குத்துச் சண்டை போட்டிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
இதைத் தொடர்ந்து நேபாள யூத் கேம் டெவலப்மெண்ட் அமைப்பு நேபாள நாட்டில் நடத்திய சர்வதேச குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இவர்கள் பங்கேற்றனர்.
இந்தியா, நேபாளம், தாய்லாந்து, பூட்டான் உள்ளிட்ட 5 நாடுகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில், தினேஷ் மோகன், ஆகாஷ்குமார், சந்தணகுமார் ஆகிய 3 பேரும் தங்கப் பதக்கமும், பாலாஜி வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.
தமிழகத்திற்கு பெருமையை தேடி தந்த இவர்கள் ரெயில் மூலம் தூத்துக்குடிக்கு திரும்பினர். குத்துச்சண்டை வீரர்களுக்கு ரெயில் நிலையத்தில் பிற குத்துச்சண்டை வீரர்கள், பொதுமக்கள், உறவினர்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.