விளையாட்டு
பந்து வீச்சாளர்களுக்கு கடும் கிராக்கி

ஐ.பி.எல். ஏலத்தில் 25 வீரர்கள் கோடீஸ்வரர்கள் - பந்து வீச்சாளர்களுக்கு கடும் கிராக்கி

Published On 2022-02-13 15:08 IST   |   Update On 2022-02-13 15:08:00 IST
ஐ.பி.எல். ஏலத்தில் ரூ.7.5 கோடியில் இருந்து அதற்கு மேல் உள்ள தொகைக்கு 25 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூர்:

15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான மெகா ஏலம் பெங்களூரில் 2 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று ஏலம் தொடங்கியது.

இதற்கான பட்டியலில் மொத்தம் 600 வீரர்கள் இடம்பெற்றனர். இதில் 290 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

தொடக்க நாளில் 74 வீரர்கள் ரூ.388.35 கோடிக்கு ஏலம் போனார்கள். 10 அணிகளும் சேர்த்து இவர்களை இந்த தொகைக்கு எடுத்தன. இதில் 41 வீரர்கள் சர்வதேச போட்டியில் விளையாடிவர்கள். 33 பேர் சர்வதேச போட்டியில் விளையாடாத உள்ளூர் மற்றும் புதுமுக வீரர்கள் ஆவார்கள்.

விக்கெட் கீப்பரும், சிறந்த அதிரடி பேட்ஸ்மேனுமான இஷான் கி‌ஷன் ஏலத்தில் அதிக விலைக்கு போனார்.அவரை ரூ.15¼ கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்து தக்கவைத்துக்கொண்டது. அதற்கு அடுத்தபடியாக தீபக் சாஹர் ரூ.14 கோடிக்கும் (சென்னை), ஸ்ரேயாஸ் அய்யர் ரூ.12.25 கோடிக்கும் (கொல்கத்தா) ஏலம் போனார்கள்.

இந்த ஐ.பி.எல். ஏலத்தில் 25 வீரர்கள் கோடீஸ்வரர்கள் ஆவார்கள். ரூ.7.5 கோடியில் இருந்து அதற்கு மேல் உள்ள தொகைக்கு 25 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டார்கள்.

இதில் 15 வீரர்கள் இந்தியர்கள் ஆவார்கள். வெஸ்ட் இண்டீஸ்-3, நியூசிலாந்து -2, ஆஸ்திரேலியா-1 இங்கிலாந்து-1, தென் ஆப்பிரிக்கா-1, இலங்கை -1 ஆகிய வீரர்கள் கோடீஸ்வரர்கள் ஆவார்கள்.

ஐ.பி.எல். ஏலத்தில் எந்த முறையும் இல்லாத வகையில் தற்போது பந்து வீச்சாளர்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டது.

வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் பந்து வீச்சாளர்களில் அதிக தொகைக்கு ஏலம் போனார். அவரை ரூ.14 கோடி கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்தது. அவரை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவியது.

கடந்த சீசனில் சென்னை அணியில் ஆடிய தீபக் சாஹரை இந்த முறை வாங்க டெல்லி, ராஜஸ்தான் அணிகள் கடுமையாக முயற்சித்தன. இறுதியாக சென்னை அணி அவரை அதிக தொகை எடுத்து தக்க வைத்துக் கொண்டது.

மற்ற வேகப்பந்து வீரர்களான ‌ஷர்துல் தாகூர் (டெல்லி) 10.75 கோடிக்கும், ஹர்‌ஷல் படேல் (பெங்களூர்) ரூ.10.75 கோடிக்கும், பிரசித் கிருஷ்ணா (ராஜஸ்தான்) ரூ.10 கோடிக்கும், பெர்குசன் (குஜராத்) ரூ.10 கோடிக்கும், ரபடா (பஞ்சாப்) ரூ.9.25 கோடிக்கும், லிவிங்ஸ்டன் (பஞ்சாப்) ரூ.11.50 கோடிக்கும் ஏலம் போனார்கள். 

இதில் பிரசித் கிருஷ்ணாவையும், பெர்குசனையும் ஏலத்தில் எடுக்க கடுமையான போட்டி நிலவியது.

மற்றொரு வேகப்பந்து வீரரான ஆவேஸ்கானை லக்னோ அணி ரூ.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் ஐ.பி.எல். ஏலத்தில் அதிக தொகைக்கு போன சர்வதேச போட்டியில் விளையாடதா வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். அவர் கடந்த சீசனில் டெல்லி அணிக்காக 16 ஆட்டத்தில் விளையாடி 24 விக்கெட் கைப்பற்றி இருந்தார். இதனால் அவரை எடுக்க கடும் போட்டி இருந்தது.

ஆவேஸ்கானுக்கான அடிப்படை விலை ரூ.20 லட்சம் ஆகும். அவர் 50 மடங்கு அதிகமாக ஏலத்தில் விலை போனார். இதற்கு முன்பு கடந்த ஐ.பி.எல்லில் சர்வதேச போட்டிகளில் விளையாடாதவர்களில் கிருஷ்ணப்பா கவதம் அதிக தொகையான ரூ.9.25 கோடிக்கு ஏலம் போனார். அதை அவேஸ்கான் முறியடித்தார். 

இந்த ஐ.பி.எல்.லில் அதிக தொகையான ரூ.15.25 கோடிக்கு ஏலம் போன இஷான் கி‌ஷனை எடுக்க கடுமையான போட்டி நிலவியது.

மும்பை அணியில் விளையாடும் அவரை தக்க வைத்துக்கொள்ள அந்த அணி நிர்வாகம் முடிவு செய்திருந்தது.

அந்த அணியுடன் பஞ்சாப் இஷான் கி‌ஷனுக்காக முதலில் போட்டி போட்டது. ரூ.8 கோடி வரை போட்டிக்கு வந்தது. பின்னர் அந்த அணி விலக குஜராத் அணி மும்பையிடம் போட்டியிட்டது. ரூ.12.75 கோடி வரைக்கும் குஜராத் அணி போட்டியிட்டது.

பின்னர் மும்பையுடன் போட்டி போட முடியாமல் அந்த அணி விலகி கொள்ள ஐதராபாத் களத்தில் குதித்தது. ஐதராபாத் அணி ரூ.15 கோடி வரை கொடுக்க முன்வந்தது. ஆனால் இறுதியில் மும்பை ரூ.15.25 கோடி கொடுத்து தக்க வைத்துக் கொண்டது.

Similar News