விளையாட்டு
கபில்தேவ்

மனம் விட்டு இருவரும் பேசுங்கள்: விராட் கோலி, கங்குலிக்கு கபில்தேவ் அறிவுரை

Update: 2022-01-26 07:26 GMT
20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகியபோது அதிக சுமையை தாங்குவதாக பலரும் கருதினோம் என கபில்தேவ் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு 7 ஆண்டுகள் பொறுப்பு வகித்த விராட் கோலியின் கேப்டன் சகாப்தம் சமீபத்தில் முடிவடைந்தது. 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்த விராட் கோலி முதலில் 20 ஓவர் அணியில் இருந்து பதவி விலகினார். அதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் முடிந்த பிறகு விராட் கோலி யாரும் எதிர்பார்க்காத வகையில் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

கேப்டன் பதவி விவகாரத்தில் அவருக்கும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று கோலியிடம் கேட்டுக்கொண்டதாக கங்குலி கூறி இருந்தார். ஆனால் தன்னிடம் யாருமே பேசவில்லை என்று கோலி தெரிவித்திருந்தார்.



இருவரும் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை கூறியது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் விராட் கோலியும், கங்குலியும் மனம் விட்டு பேச வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகியபோது அதிக சுமையை தாங்குவதாக பலரும் கருதினோம். கேப்டன் பதவியை விட்டு விலக வேண்டும் என்று யாரும் எண்ணவில்லை. அவர் அற்புதமான வீரர். அவருடைய முடிவுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்.


இருவரும் (விராட் கோலி, கங்குலி) மனம் விட்டு பேசி பிரச்சினையை சரி செய்திருக்க வேண்டும். போனை எடுத்து ஒருவருக்கொருவர் பேசுங்கள். நாட்டையும், அணியையும் முன்னிறுத்துங்கள்.

தொடக்கத்தில் எனக்கு கேட்டது எல்லாம் கிடைத்தது. சில நேரங்களில் நீங்கள் கேட்டது கிடைக்காது. அதற்காக கேப்டன் பதவியை விட்டு விலக வேண்டும் என்பதில்லை.

அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகியதற்கு எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. டெஸ்ட் போட்டியில் கோலி நிறைய விளையாடி அதிக ரன்களை எடுக்க வேண்டும் என்பது எனது விருப்பம் ஆகும்.

இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார். 

Tags:    

Similar News