செய்திகள்
84 ரன்னில் சுருண்ட வங்காளதேசத்தை எளிதாக வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா
ரபடா, நோர்ஜே தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்த வங்காள தேசம் 84 ரன்னில் சுருண்ட நிலையில், தென்ஆப்பிரிக்கா 13.3 ஓவரில் வெற்றி பெற்றது.
டி20 உலக கோப்பையில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சூப்பர் 12 குரூப் 1-ல் இடம் பிடித்துள்ள தென்ஆப்பிரிக்கா- வங்காளதேசம் அணிகள் மோதின. அபு தாபியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணியால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 84 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. தொடக்க வீரர் லிட்டன் தாஸ் 36 பந்தில் 24 ரன்களும், மஹெதி ஹசன் 25 பந்தில் 27 ரன்களும், ஷமிம் ஹொசைன் 20 பந்தில் 11 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் ஒன்றையிலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.
தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் வேகப்பந்த வீச்சாளர்கள் ரபடா, நோர்ஜே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதில் நோர்ஜே 3.2 ஓவர்கள் வீசி 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
பின்னர் 85 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்தது. டி காக் 15 பந்தில் 16 ரன்களும், ரீஜா ஹென்ரிக்ஸ் 5 பந்தில் 4 ரன்களும், வான் டர் டஸ்சன் 27 பந்தில் 22 ரன்களும், மார்கிராம் ரன்கள் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
கேப்டன் டெம்பா பவுமா 28 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க, தென்ஆப்பிரிக்கா 13.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.