செய்திகள்
யஷ்பால் சர்மா

முன்னாள் கிரிக்கெட் வீரர் யஷ்பால் சர்மா மரணம்: உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றவர்

Published On 2021-07-13 16:54 IST   |   Update On 2021-07-13 16:54:00 IST
கிரிக்கெட்டிற்குப் பிறகு வர்ணனையாளர், தேர்வுக்குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளில் வகித்த முன்னாள் வீரர் யஷ்பால் சர்மா இன்று காலமானார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யஷ்பால் சர்மா. பஞ்சாப்பை சேர்ந்த இவர் டெல்லியில் வசித்து வந்தார். இந்த நிலையில் 66 வயதான யஷ்பால் சர்மா திடீர் மாரடைப்பால் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர்.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான யஷ்பால் சர்மா 1978-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். 37 டெஸ்டில் விளையாடி 1606 ரன்களும், 42 ஒருநாள் போட்டியில் விளையாடி 883 ரன்களும் எடுத்துள்ளார்.

1983-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை போட்டியில் கபில்தேவ் தலைமையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் யஷ்பால் சர்மா இடம்பெற்று இருந்தார்.



இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் அவர் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். அவர் 61 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 89 ரன்கள் எடுத்தார். இவர் அந்த உலகக் கோப்பையில் அதிக ரன் எடுத்த 2-வது இந்திய வீரர் ஆவார். யஷ்பால் சர்மா முதல் தர போட்டியில் 21 சதம், 46 அரை சதம் உள்பட 8933 ரன் எடுத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் பயிற்சியாளர், வர்ணனையாளர், நிர்வாகம் என பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார்.

இந்திய அணியை தேர்வு செய்யும் தேர்வு குழுவில் 2 முறை இடம்பெற்று இருந்தார். 2004 முதல் 2005 வரையிலும், 2008 முதல் 2011 வரையிலும் தேர்வு குழு உறுப்பினராக யஷ்பால் சர்மா பணியாற்றினார்.

Similar News