செய்திகள்
உனத்கட்

அவர் ஒருபோதும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படமாட்டார்: உனத்கட் எதிர்காலம் குறித்து பயிற்சியாளர் தகவல்

Published On 2021-05-26 16:12 IST   |   Update On 2021-05-26 16:12:00 IST
ரஞ்சி கோப்பை 2019-2020 சீசனில் 67 விக்கெட் வீழ்த்திய ஜெய்தேவ் உனத்கட் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது.
இந்தியாவின் முதல்-தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் 2019-2020 சீசனில் சவுராஷ்டிரா அணியின் கேப்டனாக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட் அபாரமாக பந்து வீச்சினார். அவர் 67 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அவரது சிறப்பான பந்து வீச்சால் சவுராஷ்டிரா அணி வெற்றி பெற்றது.

சிறப்பான பந்து வீச்சினால் 29 வயதான ஜெய்தேவ் உனத்கட் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. தற்போது ஐசிசி உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியிலும் இடம் கிடைக்கவில்லை.

இதனால் உனத்கட் வேதனை அடைந்தார். இந்த நிலையில் சவுராஷ்டிரா ரஞ்சி கோப்பையை வென்றபோது அந்த அணிக்கு பயிற்சியாளராக இருந்த கர்சன் காவ்ரி, உனத்கட் இனிமேல் இந்திய அணியில் இடம் பிடிக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கர்சன் காவ்ரி கூறுகையில்,

ரஞ்சி போட்டி இறுதி ஆட்டம் நடைபெறும்போது நான் இந்திய அணியின் தேர்வாளர் ஒருவரிடம், உனத்கட் 60 விக்கெட்டிற்கு மேல் வீழ்த்தியுள்ளார். தனிநபராக அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து வந்துள்ளார். அவருக்கு இந்திய ‘ஏ’ அணியிலாவது இடம் கொடுக்கக் கூடாதா? என்று கேட்டேன்.

அதற்கு அந்த தேர்வாளர் என்னிடம், அவர் இந்திய அணிக்கு எப்போதும் தேர்வாகமாட்டார். நாங்கள் 30-க்கும் மேற்பட்ட வீரர்களை கண்காணித்து வருகிறோம். அதில் அவர் பெயர் குறித்து ஆலோசனைக்கூட செய்யவில்லை என்றார்.



உனத்கட் இவ்வளவு விக்கெட் வீழ்த்துவதின் பயன் என்ன? என்று கேட்டதற்கு, அவருக்கு ஏற்கனவே 32-33 வயது ஆகிவிட்டது. அவரது வயது அவரது கிரிக்கெட் கேரியரை வீணாக்கிவிட்டது. இது அவரை இந்திய அணியில் இடம்பிடிப்பதை நிறுத்திவிடும் என்றார்’’ எனக் கூறினார்.

மேலும் அந்த தேர்வாளர், நீண்ட காலமாக இந்திய அணிக்காக விளையாடும் வீரர்கள் மீது கவனம் செலுத்தி வருகிறோம்’’ என்றார்.

இடது கை வேகபந்து வீச்சாளரான உனத்கட் 2010-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடைசியாக டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

Similar News