செய்திகள்
கோப்புபடம்

ஐபிஎல் போட்டியில் விளையாடிய தென்ஆப்பிரிக்க, வங்காளதேச வீரர்கள் நாடு திரும்பினர்

Published On 2021-05-07 06:47 GMT   |   Update On 2021-05-07 06:47 GMT
ஆஸ்திரேலியாவில் மே 15-ந் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் என 40 பேர் இந்தியாவில் தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

புதுடெல்லி:

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 9-ந் தேதி சென்னையில் தொடங்கியது. சென்னை, மும்பையில் போட்டி முடிந்த நிலையில் அகமதாபாத், டெல்லியில் ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி அணிகளை சேர்ந்த 4 வீரர்கள் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் எல்.பாலாஜி, மைக் ஹஸ்சி ஆகியோருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஐ.பி.எல். போட்டியை காலவரையின்றி கிரிக்கெட் வாரியம் ஒத்திவைத்தது. இந்த போட்டியில் விளையாடிய ஒவ்வொரு நாட்டு வீரர்களையும் பத்திரமாக அவர்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்கும் பணியில் கிரிக்கெட் வாரியம் ஈடுபட்டது.

அதன்படி இங்கிலாந்து வீரர்கள் முதலில் நாடு திரும்பினர். தொடக்கத்தில் 8 வீரர்கள் லண்டன் புறப்பட்டு சென்றனர். அதைத் தொடர்ந்து மேலும் 3 வீரர்கள் நாடு திரும்பினர்.

இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆஸ்திரேலியாவில் மே 15-ந் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் என 40 பேர் இந்தியாவில் தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அவர்களை கிரிக்கெட் வாரியம் தற்போது மாலத்தீவுக்கு அனுப்பி வைத்துள்ளது. வீரர்கள் அனைவரும் மாலத்தீவு சென்றடைந்தனர். அங்கு அவர்கள் தனிமையில் இருப்பார்கள். பின்னர் அங்கிருந்து தடை காலம முடிந்தபிறகு ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்வார்கள்.

ஐ.பி.எல்.லில் விளையாடிய தென் ஆப்பிரிக்க வீரர்கள் 11 பேர் நாடு திரும்பினர். அவர்கள் டெல்லியில் இருந்து ஜோகன்ஸ்பர்க்குக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றனர்.

வங்காள தேச வீரர்களான சகீப்-அல்அசன், முஸ்டாபிசுர் ரகுமான் ஆகியோர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஏற்பாடு செய்திருந்த விமானம் மூலம் தங்கள் நாட்டுக்கு சென்றடைந்தனர்.

தென் ஆப்பிரிக்கா, வங்காள தேச நாடுகளில் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை.

ஐ.பி.எல்.லில் விளையாடிய நியூசிலாந்து வீரர்கள் இன்று நாடு திரும்புகிறார்கள். வில்லியம்சன், ஜேமிசன், சான்ட்னெர் ஆகியோரை தவிர்த்து 10 வீரர்கள் உள்பட நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த 17 பேர் தங்களது நாட்டுக்கு செல்கிறார்கள்.

இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கான தடையை இங்கிலாந்து நீக்கியபிறகு வில்லியம்சன் உள்ளிட்ட 4 பேர் அங்கு செல்கின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி தொற்று இல்லை என்பதை குறிக்கும் நெகடிவ் முடிவு வந்தபிறகே ஆஸ்திரேலியா திரும்ப முடியும்.

இதனால் அவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றொரு சி.எஸ்.கே. அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி ஆகியோர் டெல்லியில் இருந்து ஆம்புலன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களுக்கு இங்கு கிசிசை அளிக்கப்படுகிறது.

Tags:    

Similar News