செய்திகள்
ஐபிஎல் ஏலம்

கடைசி வீரராக அர்ஜுன் தெண்டுல்கர்: மொத்தம் 57 வீரர்கள், ரூ. 145.30 கோடி

Published On 2021-02-18 20:45 IST   |   Update On 2021-02-18 20:45:00 IST
அர்ஜுன் தெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்க, அத்துடன் ஐபிஎல் 2021 சீசன் வீரர்கள் ஏலம் முடிவடைந்தது. மொத்தம் 57 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்கள்.
ஐபிஎல் சீசன் 2021-க்கான வீரர்கள் ஏலம் இன்று நடைபெற்றது. 292 வீரர்கள் ஏலம் விட தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் தென்ஆப்பிரிக்காவின் கிறிஸ் மோரிஸ் அதிகபட்சமாக 16.25 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார். அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்தது.

அதற்கு அடுத்தப்படியாக நியூசிலாந்தின் கைல் ஜேமிசன் 15 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். அவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியது. அடுத்தப்படியாக மேக்ஸ்வெல் 14.25 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார். இவரையும் ஆர்சிபி அணியே வாங்கியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆஸ்திரேலியாவின் ஜய் ரிச்சர்ட்சன் 14 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார். இவரை பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது. அதேபோல் ரிலே மெரிடித்தை 8 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகபட்சமாக கிருஷ்ணப்பாக கௌதமை 9.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. தமிழகத்தைச் சேர்ந்த ஷாருக் கானை 5.25 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்தது. சர்வதேச போட்டிகளில் விளையாடாத இந்திய வீரர்கள் இந்த இருவரும்தான் அதிக விளைக்குப் போனார்கள்.

ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ் முதல் சுற்றில் ஏலம் போகவில்லை. அதன்பின் அடிப்படை விலையில் எடுக்கப்பட்டார்கள். ஏலத்தின் கடைசி நபராக அர்ஜூன் தெண்டுல்கர் ஏலம் விடப்பட்டார். அவரை அடிப்படை விலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது. அத்துடன் ஏலம் முடிவடைந்தது.

இன்று மொத்தம் 57 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டார்கள். இதில் 22 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். 8 அணிகளும் மொத்தம் 145 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளது.

Similar News