செய்திகள்
குசால் பெரேரா, திரிமானே

காலே டெஸ்ட்: 2-வது இன்னிங்சில் இலங்கை முன்னேற்றம்- 3-வது நாள் ஆட்ட முடிவில் 156/2

Published On 2021-01-16 15:17 GMT   |   Update On 2021-01-16 15:17 GMT
இங்கிலாந்துக்கு எதிரான காலே டெஸ்டில் இலங்கை அணி 2-வது இன்னிங்சில் சிறப்பாக விளையாட 3-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்துள்ளது.
இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 135 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இங்கிலாந்து ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் 421 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் 228 ரன்கள் அடித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

முதல் இன்னிங்சில் 286 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சில் சொற்ப ரன்களில் சுருண்டதால் இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்க நேரிடும் என்ற நிலை இருந்தது.

ஆனால் தொடக்க வீரர்களான குசால் பெரேரா, லஹிரு திரிமானே ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இருவரும் அரைசதம் அடித்தனர். தொடர்ந்து விளையாடிய குசால் பெரேரா 62 ரன்னில் வெளியேறினார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்தது.

அடுத்து வந்த குசால் மெண்டிஸ் 15 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இவர் கடந்த நான்கு இன்னிங்சில் தொடர்ந்து டக்அவுட் ஆனார்.

3-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 156 எடுத்துள்ளது. திரிமானே 76 ரன்களுடனும், லசித் எம்புல்டெனியாக 0 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தற்போது வரை இலங்கை அணி 130 ரன்கள் பின்தங்கியுள்ளது.
Tags:    

Similar News