செய்திகள்
சச்சின் தெண்டுல்கர்

முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்று இந்தியா படுதோல்வி - தெண்டுல்கர் கருத்து

Published On 2020-12-20 06:31 GMT   |   Update On 2020-12-20 06:31 GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது குறித்து சச்சின் தெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

மும்பை:

இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் மோசமான நாளாக நேற்று அமைந்தது. டெஸ்ட் வரலாற்றில் மிகவும் குறைந்தபட்ச ரன்னை எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் படுதோல்வியை தழுவியது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகல்-இரவாக நடந்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 244 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவை முதல் இன்னிங்சில் 191 ரன்னில் இந்தியா மடக்கியது.

53 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா 2-வது இன்னிங்சில் ரன்களை குவித்து ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் மிகவும் மோசமாக விளையாடினார்கள்.

128 பந்துகளை மட்டுமே ஆடிய இந்திய வீரர்கள் 36 ரன்களில் சுருண்டனர். டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் மோசமான ஸ்கோர் இதுவாகும். 46 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பரிதாப நிகழ்வு நடந்துள்ளது. 90 ரன் இலக்கை ஆஸ்திரேலியா 2 விக்கெட்டை இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியில் அனைத்து வீரர்களுமே ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தனர். இந்த ஒற்றை இலக்கத்தில் அதிகபட்ச ரன் 9 (அகர்வால்) ஆகும். புஜாரா, ரகானே, அஸ்வின் ஆகிய 3 வீரர்கள் ரன் எதுவும் எடுக்காமல் ‘டக் அவுட்’ ஆனார்கள்.

அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கில் அவுட் ஆனது இந்திய அணியின் மோசமான சாதனையாகும். இதற்கு முன்பு 1924-ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் தென் ஆப்ரிக்க வீரர்கள் அனைவருமே ஒற்றை இலக்கத்தில்ஆட்டம் இழந்து இருந்தனர்.

இந்த டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா 30 ரன்னில் சுருண்டு இருந்தது. இந்த போட்டிக்கு பிறகு தற்போது தான் இந்திய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறி மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

அடிலெய்டு டெஸ்டில் 36 ரன்னில் சுருண்டு இந்தியா படுதோல்வியை தழுவியதால் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளது. இந்த தோல்வி தொடர்பாக கிரிக்கெட்டின் சகாப்தம் தெண்டுல்கர் கூறியதாவது:-

முதல் இன்னிங்சில் பேட்டிங், பந்துவீச்சை பார்த்தபோது இந்தியா ஆதிக்கம் செலுத்தியது போல் தெரிந்தது. 3-வது நாள் காலையில் ஆஸ்திரேலிய அணியினர் கடுமையான முறையில் மீண்டு வந்தனர். இதுதான் டெஸ்ட் கிரிக்கெட்.

போட்டி முடியும்வரை எதுவும் முடிந்து விடவில்லை. 2-வது இன்னிங்சில் இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆஸ்திரேலிய பவுலர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீரர் வார்னே கூறும்போது, ‘கம்மின்ஸ், ஹாசல்வுட் சிறப்பாக பந்து வீசினார்கள். பந்துகள் இப்படிவரும் என்று இந்திய வீரர்கள் ஒருபோதும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் செயல் பாட்டை நம்பவே முடிய வில்லை’ என்றார்.

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீரர் பிரக்யான் ஓஜா கூறும்போது, ‘இந்த டெஸ்டில் இரு அணியும் சம பலத்துடன் விளையாடின. ஒரு மணி நேர ஆட்டம் நமக்கு எதிராக மோசமாக திரும்பிவிட்டது’ என்றார்.

Tags:    

Similar News