செய்திகள்
எம்எஸ் டோனி

மெகா ஏலத்தில் டோனியை தக்க வைக்க வேண்டாம் - சி.எஸ்.கே.வுக்கு ஆகாஷ் சோப்ரா அறிவுரை

Published On 2020-11-17 14:12 GMT   |   Update On 2020-11-17 14:12 GMT
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மெகா ஏலத்தில் டோனியை தக்க வைத்து கொள்ள கூடாது என இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
புதுடெல்லி:

சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதன்முறையாக பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கடந்த 2010, 2011 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் 3 முறை பட்டம் பெற்ற சென்னை அணி இந்த ஐ.பி.எல். தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருந்தது.  அணியில் சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் இந்த சீசனில் விளையாடவில்லை.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும்பொழுது, அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளுக்கான சீசனில் மெகா ஏலம் நடைபெறும் பட்சத்தில் சென்னை அணி டோனியை தக்க வைத்து கொள்ள கூடாது என கூறியுள்ளார்.  இதற்கு அவர் விளக்கமும் கொடுத்துள்ளார்.

தொடர்ந்து இதுபற்றி சோப்ரா கூறும்பொழுது, டோனியை அணி தக்க வைத்து கொண்டால் ரூ.15 கோடி இழப்பு ஏற்படும்.  அதற்கு பதிலாக டோனியை பொது ஏலத்தில் விடுவித்து, பின்னர் போட்டிக்கான உரிமை கார்டு வழியே அவரை வாங்கி கொள்ளலாம்.  இதனால், அணி பணம் சேமிக்க முடியும்.  நல்லதொரு அணியையும் உருவாக்க முடியும் என தெரிவித்து உள்ளார்.

மெகா ஏலத்தில் 3 ஆண்டுகள் டோனியை வைத்திருந்த அணியாக நீங்கள் இருப்பீர்கள். ஆனால் டோனி உங்களுடன் 3 ஆண்டுகளாக அடுத்து இருப்பாரா? டோனியை வைத்திருக்க வேண்டாம் என நான் கூறவில்லை.  அவர் அடுத்த ஐ.பி.எல். போட்டியை விளையாடுவார்.  ஆனால், தக்க வைத்த வீரராக டோனி இருக்கும் பட்சத்தில் நீங்கள் ரூ.15 கோடியை அளிக்க வேண்டி வரும்.

3 ஆண்டுகளுக்கு உங்களுடன் டோனி இருக்கவில்லை எனில் மற்றும் 2021 சீசனில் அவர் விளையாடுகிறார் எனில், 2022 சீசனுக்கான ரூ.15 கோடி உங்களுக்கு திரும்ப கிடைக்கும். ஆனால் அந்த ரூ.15 கோடி மதிப்பிலான வீரரை நீங்கள் எப்படி தேடி கண்டுபிடிப்பீர்கள்?

அதற்கு மெகா ஏலம் உதவும். அந்த பணம் உங்களுடன் இருக்கும் பட்சத்தில், ஒரு பெரிய அணியை நீங்கள் உருவாக்க முடியும்.  சரியான வீரர்களையும் எடுக்க முடியும். டோனியை மெகா ஏலத்தில் விடுவித்து மீண்டும் எடுக்கும்பொழுது அது அணிக்கு பலனளிக்கும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News