செய்திகள்
கோப்புபடம்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நுழைவது எப்படி? சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதிய திட்டம்

Published On 2020-11-17 08:26 GMT   |   Update On 2020-11-17 08:26 GMT
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழையும் அணிகளை எப்படி தேர்வு செய்வது என்பது குறித்து ஐ.சி.சி. புதிய திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

துபாய்:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது.

மொத்தம் உள்ள 9 அணிகள் உள்ளூர், வெளிநாடு அடிப்படையில் குறைந்தது 6 தொடர்களில் பங்கேற்க வேண்டும்.

இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த ஆண்டு ஜுன் மாதம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதும்.

இதுவரை நடந்த போட்டியின் அடிப்படையில் இந்தியா 360 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது. ஆஸ்திரேலியா 296 புள்ளிகளுடனும், இங்கிலாந்து 292 புள்ளிகளுடனும், நியூசிலாந்து 180 புள்ளிகளுடனும், பாகிஸ்தான் 166 புள்ளிகளுடனும் அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளன.

கொரோனா வைரஸ் திடீரென ஏற்பட்டதால் பல்வேறு தொடர்கள் ரத்து செய்யப்பட்டன. டெஸ்ட் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறவில்லை.

இதனால் இறுதிப் போட்டிக்குள் நுழையும் அணிகளை எப்படி தேர்வு செய்வது என்பது குறித்து ஐ.சி.சி. புதிய திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி புள்ளிகளின் சதவீத அடிப்படையில் இறுதிப் போட்டிக்கான அணிகளை தேர்வு செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

சதவீத அடிப்படையில் ஆஸ்திரேலியா 82.2 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 75 சதவீதத்துடன் 2-வது இடத்திலும், இங்கிலாந்து 60.83 சதவீதத்துடன் 3-வது இடத்தில் உள்ளனர்.

இந்த புதிய முறையால் இந்திய அணி எஞ்சிய ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து தொடர்களில் வெற்றிபெற வேண்டும். அப்படி வெற்றிபெற்றால் தான் முதல் 2 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்குள் நுழையமுடியும்.

Tags:    

Similar News