செய்திகள்
சாம்பியன் பட்டம் வென்ற டிரைல்பிளாசர்ஸ் அணி

பெண்கள் டி 20 கிரிக்கெட் - சூப்பர் நோவாசை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது டிரைல்பிளாசர்ஸ்

Published On 2020-11-09 17:53 GMT   |   Update On 2020-11-09 17:53 GMT
சூப்பர் நோவாஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான டிரைல்பிளாசர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
சார்ஜா:

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 3-வது பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜாவில் நடைபெற்றது.

இதில் நடப்பு சாம்பியன் சூப்பர் நோவாஸ் மற்றும் டிரைல்பிளாசர்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. டாஸ் வென்ற சூப்பர் நோவாஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி டிரைல்பிளாசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.

அந்த அணியில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். அவர் 68 ரன்னில் அவுட்டானார். தீந்திரா டாடின் 20 ரன்னும், தீப்தி சர்மா 10 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர்.

இறுதியில் டிரைல்பிளாசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்தது. 

சூப்பர் நோவாஸ் சார்பில் ராதா யாதவ் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சூப்பர் நோவாஸ் அணி இறங்கியது.

அந்த அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் 30 ரன்னும், சசிகலா சிரிவர்தனே 19 ரன்னும், தனியா பாட்டியா 14 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில், சூப்பர் நோவாஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் டிரைல்பிளாசர்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
Tags:    

Similar News