செய்திகள்
அரை சதமடித்த சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன், டெவாட்டியா அபாரம் - பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் சாதனை வெற்றி

Published On 2020-09-27 17:50 GMT   |   Update On 2020-09-27 18:09 GMT
சஞ்சு சாம்சன், டெவாட்டியாவின் அதிரடி ஆட்டத்தால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட்டின் 9வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயலஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்தது. கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

முதல் 10 ஓவர் முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் விக்கெட் இழப்பின்றி 110 ரன்கள் குவித்தது. மயங்க் அகர்வால் 69 ரன்களும், லோகேஷ் ராகுல் 36 ரன்கள் எடுத்திருந்தனர். 

அரைசதம் அடித்த பின் மயங்க் அகர்வால் ருத்ர தாண்டவம் ஆடினார். 13.2 ஓவரில் பஞ்சாப் அணி 150 ரன்னைக் கடந்தது. இதற்கிடையில் கேஎல் ராகுல் 35 பந்தில் அரைசதம் அடித்தார்.

மறுமுனையில் ஜெட் வேகத்தில் சென்ற மயங்க் அகர்வால் 15-வது ஓவரின் கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டி 45 பந்தில் 9 பவுண்டரி, 7 சிக்சருடன் சதம் அடித்தார். மயங்க் அகர்வால் 50 பந்தில் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேஎல் ராகுல் 69 ரன்கள் எடுத்து வெளியேறினார். 

இறுதியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 ஓவர் முடிவில் 2  விக்கெட்டுக்கு 223 ரன்கள் குவித்தது. மேக்ஸ்வெல் 13 ரன்னும், பூரன் 25 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ராஜஸ்தான் ராயலஸ் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லரும், ஸ்டீவ் ஸ்மித்தும் விளையாடினர். பட்லர் 4 ரன்னில் அவுட்டாகினார்.
ஸ்மித் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து ஆட்டமிழந்தார்.  

ஸ்மித் அவுட்டானதும் மறுமுனையில் ஆடிய சஞ்சு சாம்சன் அதிரடியை வெளிப்படுத்தினார். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். சாம்சன் 42 பந்தில் 7 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 85 ரன்கள் குவித்து அவுட்டானார். அப்போது ராஜஸ்தான் அணி 161 ரன்கள் எடுத்திருந்தது.

தொடர்ந்து ஆடிய ராகுல் டெவாட்டியா, 18 வது ஓவரில் 5 சிக்சர் அடித்து அசத்தினார்.  இதனால் கடைசி 2 ஓவரில் ராஜஸ்தான் வெற்றி பெற 21 ரன்கள் தேவைப்பட்டது. அதிரடியாக ஆடிய டெவாட்டியா 53 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

இறுதியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக சேசிங் கொண்ட வெற்றி இது என்பதால் ராஜஸ்தான் அணி சாதனை வெற்றி பெற்றது.
Tags:    

Similar News