செய்திகள்
எம்.எஸ். டோனி

இந்திய விமானப்படையில் ரபேல் விமானங்கள் சேர்க்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த எம்எஸ் டோனி

Published On 2020-09-10 10:22 GMT   |   Update On 2020-09-10 10:22 GMT
பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கப்பட்ட ஐந்து ரபேல் விமானங்கள் முறைப்படி இன்று இந்தியா விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டதற்கு எம்எஸ் டோனி வாழ்த்து தெரிவித்ள்ளார்.
உலகின் அதிநவீன போர் விமானமான ரபேல் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் தயாரித்து வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதில் முதல்கட்டமாக, 5 ரபேல் போர் விமானங்கள் கடந்த ஜூலை 27-ந்தேதி, அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்துக்கு வந்து சேர்ந்தன.

இந்த விமானங்கள் இன்று (வியாழக்கிழமை) முறைப்படி இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன. இதற்கான விழா, அம்பாலா விமானப்படை தளத்தில் நடைபெற்றது. முதலில் ரபேல் விமானம் முறைப்படி அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அனைத்து மத வழிபாட்டுடன் சம்பிரதாய பூஜை (சர்வ தர்ம பூஜை) செய்யப்பட்டது. பின்னர் ரபேல் விமானங்கள் மற்றும் தேஜஸ் விமானங்கள் வானில் சாகசங்கள் நிகழ்த்திக் காட்டின.

ரபேல் விமானங்களுக்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர், முறைப்படி ரபேல் விமானங்கள் விமானப்படையில் சேர்க்கப்பட்டன. இதற்கான ஆவணத்தை விமானப்படையின் 17 படைப்பிரிவின் 'தங்க அம்புகள்' குழு கட்டளை அதிகாரி கேப்டன் ஹர்கீரத் சிங்கிடம் பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் வழங்கினார்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி ரபேல் விமானங்கள் சேர்க்கப்பட்ட நிலையில், இந்திய விமானப்படைக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எம்எஸ் டோனி டுவிட்டர் பக்கத்தில் ‘‘உலகின் சிறந்த போர் விமானம் என்று பெயர் பெற்ற ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் இறுதியாக சேர்க்கப்பட்ட விழா நடைபெற்றுள்ளது. புகழ்பெற்ற 17 படைப்பிரிவுக்கு (கோல்டன் அம்புகள்) வாழ்த்துக்கள். ரபேல் ‘மிராஜ் 2000’-ன் சேவை சாதனையை முறியடிக்கும் என்று நம்புகிறோம். ஆனால் Su30MKI என் விருப்பமாக உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News