செய்திகள்
முகமது அசாருதீன்

ஏன் தடைசெய்தார்கள் என்று உண்மையிலேயே எனக்கு தெரியவில்லை: முகமது அசாருதீன்

Published On 2020-07-31 09:48 GMT   |   Update On 2020-07-31 09:48 GMT
என்னை தடை செய்ததற்கான காரணங்கள் குறித்து எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை என்று முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன். இவருக்கு கடந்த 2000-ம் ஆண்டில் மேட்ச் பிக்சங் குற்றச்சாட்டில் பிசிசிஐ-யால் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

பின்னர் நீதிமன்றத்தால் அவரது தடை நீக்கப்பட்டது. தொடர்ந்து அசாருதீன் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது தலைவராக உள்ளார்.

இந்தநிலையில், அவர் பேட்டி ஒன்றில் தனக்கு ஏன் தடை விதிக்கப்பட்டது என்றே தெரியவில்லை எனக் கூறி உள்ளார்.

இதுகுறித்து முகமது அசாருதீன் கூறுகையில், ‘‘நடந்த சம்பவங்கள் குறித்து நான் யார் மீதும் பழி சுமத்த விரும்பவில்லை. என்னை தடை செய்ததற்கான காரணங்கள் குறித்து எனக்கு உண்மையிலேயே தெரியாது.

நான் போராட முடிவு செய்தேன். 12 ஆண்டுகள் கழித்து இதில் இருந்து விடுபட்டது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஹைதராபாத் கிரிக்கெட் அமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின் நான் மிகவும் திருப்தி அடைந்தேன். பிசிசிஐ ஏஜிஎம் கூட்டத்தில் கூட கலந்து கொண்டேன்.

நான் 16 முதல் 17 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடி உள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் கேப்டனாக செயல்பட்டுள்ளேன். இதைவிட அதிகமாக நான் என்ன கேட்க முடியும். கிரிக்கெட் பயணம் தனக்கு திருப்தி அளித்தது’’ என்றார்.

முகமது அசாருதீன் 99 டெஸ்ட் போட்டிகளில் ஆடி உள்ளார். 99-வது டெஸ்ட் போட்டிதான் அவரின் கடைசி போட்டியாக இருக்கும் என அவர் எதிர்பார்க்கவில்லை. தன்னால் 100 டெஸ்ட் போட்டிகளில் ஆட முடியவில்லை என்பது குறித்து தான் கவலை அடையவில்லை என்றும் கூறினார்.
Tags:    

Similar News