செய்திகள்
அலஸ்டைர் குக் தேர்வு செய்த தலைசிறந்த ஐந்து பேட்ஸ்மேன்கள்: ஒரு இந்திய வீரருக்கு இடம்
இங்கிலாந்தின் அணியின் தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆன அலஸ்டைர் குக் அவர் விளையாடிய காலத்தின் தலைசிறந்த ஐந்து பேட்ஸ்மேன்களை தேர்வு செய்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் தலைசிறந்த இடது கை பேட்ஸ்மேன் அலஸ்டைர் குக். டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் தெண்டுல்கரின் சாதனையை தொடக்கூடியவராக இருந்தார். ஆனால் 2018-ம் ஆண்டுடன் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
இங்கிலாந்து அணிக்காக 161 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12472 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 45.4 ஆகும். 33 சதங்கள், 57 அரைசதங்கள் அடித்துள்ளார்.
இவர் விளையாடிய காலத்தின் தலைசிறந்த ஐந்து பேட்ஸ்மேன்களை தேர்வு செய்துள்ளார். அதில் தற்போதைய இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு இடம் கொடுத்துள்ளார்.
ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் தரவரிசையில் தொடர்ந்து டாப் ரேங்கில் இருப்பதாலும், சராசரி 50-க்கு மேல் வைத்துள்ளதாலும், மூன்று வகை கிரிக்கெட்டிலும் எளிதாக ரன்கள் குவிக்கும் திறமையை பெற்றிருப்பதாலும் அவரை தேர்வு செய்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் இடது கை பேட்ஸ்மேன் பிரையன் லாராவை தனது பட்டியலில் சேர்த்துள்ளார். அவர் விளையாடிய காலத்தில் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்று புகழ்ந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், தென்அப்பிரிக்காவின் ஜேக்யூஸ் கல்லீஸ், இலங்கை அணியின் குமார் சங்ககரா ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார்.
59 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ள அலஸ்டைர் குக், இந்த மூன்று பேருடன் நெருங்கி விளையாடிய அனுபவம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.