செய்திகள்
ஜாகீர் அப்பாஸ்

இந்த இரண்டு விஷயங்களால் பாகிஸ்தான் கிரிக்கெட் பாதிப்படைந்துள்ளது: ஜாகீர் அப்பாஸ்

Published On 2020-04-22 12:25 GMT   |   Update On 2020-04-22 12:25 GMT
ஊழல் விவகாரம் மற்றும் இலங்கை வீரர்கள் மீது தாக்குதல் இந்த இரண்டு சம்பவங்களும் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் நற்பெயரை பாதித்து விட்டன என ஜாகீர் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்கென்று தனி இடம் உண்டு. அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பஞ்சம் இல்லை என்று சொல்லலாம். அதேபோல் தலைசிறந்த பேட்ஸ்மேன்களையும் பாகிஸ்தான் உருவாக்கியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் ஆர்வம் உடையவர்கள்.

ஆனால், 2009-ம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தான் சென்று விளையாடியது. அப்போது வீரர்கள் மைதானத்திற்கு வரும்போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இலங்கை வீரர்கள் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்குப்பிறகு வெளிநாடு அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்தது. இந்த சம்பவம் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

மற்றொரு மேட்ச்-பிக்சிங் மற்றும் ஊழல். பாகிஸ்தான் வீரர்கள் பெரும்பாலானோர் இதில் சிக்கியுள்ளனர். ஆனால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

இந்த இரண்டும்தான் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகீர் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜாகீர் அப்பாஸ் கூறுகையில் ‘‘தற்போது மேட்ச்-பிக்சிங் குறித்து முடிவு எடுக்க சரியான நேரம். இந்த ஊழல் விவகாரத்தை நாம் மிகவும் கடுமையாக கையாளவில்லை. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் பெயர் கெட்டுவிட்டது. மேலும் நமது கிரிக்கெட்டின் நடவடிக்கையையும் பாதித்துள்ளது.

இலங்கை வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக, உள்நாட்டில் நடக்கக்கூடிய போட்டிகள் அனைத்தையும் வெளிநாட்டில் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டோம்’’ என்றார்.
Tags:    

Similar News