செய்திகள்
சதம் அடித்த பெங்கால் வீரர் மஜும்தார்

ரஞ்சி டிராபி காலிறுதி ஆட்டங்கள்: முதல்நாள் ஆட்டம் அப்டேட்....

Published On 2020-02-20 14:13 GMT   |   Update On 2020-02-20 14:13 GMT
ரஞ்சி டிராபி காலிறுதி முதல் நாள் ஆட்டத்தில் பெங்கால், குஜராத் அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் கர்நாடகாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கின. பெங்கால் - ஒடிசா இடையிலான ஆட்டம் கட்டாக்கில் நடைபெற்று வருகிறது. இதில் ஒடிசா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி பெங்கால் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஒடிசாவின் நேர்த்தியான பந்து வீச்சால் பெங்கால் 46 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து திணறியது.

6-வது விக்கெட்டுக்கு மஜும்தார் உடன் விக்கெட் கீப்பர் கோஸ்வாமி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. கோஸ்வாமி 34 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது பெங்கால் 6 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பின் 7-வது விக்கெட்டுக்கு மஜும்தார் உடன் ஷபாஸ் அகமது ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகவும் அபாரமாக விளையாடியது. மஜும்தார் சதம் அடிக்க ஷபாஸ் அகமது அரைசதம் அடித்தார். இருவரும் முதல்நாள் ஆட்ட நேரம் முடியும் வரை ஆட்டமிழக்காமல் இருக்க பெங்கால் அணி 300 ரன்னைத் தாண்டியது. பெங்கால் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் குவித்துள்ளது. மஜும்தார் 136 ரன்களுடனும், ஷபாஸ் அகமது 82 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

வால்சாட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் - கோவா அணிகள் விளையாடி வருகின்றன. குஜராத் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் கோஹெல் 52 ரன்னும், பன்சால் 28 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த மெராய் 84 ரன்கள் விளாசினார். கேப்டன் பார்தீவ் பட்டேல் சதம் அடித்து முதல்நாள் ஆட்டம் முடியும் வரை ஆட்டமிழக்காமல் இருக்க குஜராத் 4 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் குவித்துள்ளது பார்தீவ் பட்டேல் 118 ரன்களுடனும், காந்தி 40 ரன்களுடனம் களத்தில் உள்ளனர்.

சவுராஷ்டிரா - ஆந்திரா இடையிலான ஆட்டத்தில் ஆந்திரா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி சவுராஷ்டிரா அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் மூன்று வீரர்களும் விரைவிலேயே வெளியேறினர். ஜடேஜா 73 ரன்களும், ஜாக்சன் 50 ரன்களும் சேர்த்தனர். ஜானி ஆட்டமிழக்காமல் 53 ரன்கள் அடிக்க சவுராஷ்டிரா 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்துள்ளது.

ஜம்முவில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் அணிக்கெதிராக கர்நாடகா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இன்றைய முதல் நாளில் 6 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. இதில் கர்நாடகா 14 ரன்கள் எடுப்பதற்குள் தொடக்க ஜோடியை இழந்தது. சமர்த் 4 ரன்னிலும், படிக்கல் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
Tags:    

Similar News