செய்திகள்
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இந்திய அணி

புரோ லீக் ஹாக்கி - பெல்ஜியத்தை 2-1 என வீழ்த்தி அசத்தியது இந்திய அணி

Published On 2020-02-09 02:51 GMT   |   Update On 2020-02-09 02:51 GMT
ஒடிசாவின் புவனேசுவரத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் உலக சாம்பியன் பெல்ஜியத்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்திய அணி.
புவனேசுவரம்:

உலகின் தலைசிறந்த ஹாக்கி அணிகள் பங்கேற்கும் ஆண்களுக்கான 2-வது புரோ லீக் ஹாக்கி போட்டி கடந்த மாதம் ஒடிசாவில் தொடங்கியது. இந்த தொடர் ஜூன் மாதம் வரை பல்வேறு நாடுகளில் நடக்கிறது.
 
இதில் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா, ‘நம்பர் ஒன்’ அணியான ஆஸ்திரேலியா, உலக சாம்பியன் பெல்ஜியம், இந்தியா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து, நியூசிலாந்து ஆகிய 9 அணிகள் கலந்து கொள்கின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதவேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் நடைபெறுகிறது. அந்த போட்டிக்கு தயாராவதற்கு புரோ லீக் கனகச்சிதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்நிலையில், ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, உலக சாம்பியன் பெல்ஜியத்தை எதிர்கொண்டது.

இந்திய அணியில் மன்தீப் சிங் 2-வது நிமிடத்திலும், ரமன்தீப்சிங் 47-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். பெல்ஜியம் அணியில் கவுதிர் போக்கார்ட் 33-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கோல் திருப்பினார்.

இறுதியில், இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தியது. இந்த தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக 3-வது வெற்றியை ருசித்தது. இதன்மூலம் இந்திய அணி தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளது.
Tags:    

Similar News