செய்திகள்
ஐ.எஸ்.எல். கால்பந்து - ஜாம்ஷெட்பூரை 2-1 என வீழ்த்தியது மும்பை அணி
மும்பையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது மும்பை சிட்டி எப்.சி. அணி.
மும்பை:
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
மும்பையில் இன்று நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி. மற்றும் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின.
ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே ஜாம்ஷெட்பூர் அணியின் அகோஸ்டா 7வது நிமிடத்தில் கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் முதல் பாதி முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி 1-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் மும்பை அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். அவர்களின் ஆட்டத்துக்கு ஜாம்ஷெட்பூர் அணி வீரர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை.
மும்பை அணியின் வீரர் அமைன் செர்மேட்டி 60-வது நிமிடத்திலும், பித்யனந்தா சிங் 92வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
இறுதியில், மும்பை சிட்டி எப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி வெற்றி பெற்றது.
மும்பை சிட்டி அணி தான் ஆடிய 16 ஆட்டங்களில் 7 வெற்றி, 5 டிரா, 4 தோல்வி என 26 புள்ளிகளுடன் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.