செய்திகள்
விக்ரம் ரத்தோர்

உலக கோப்பைக்கு வீரர்களை கண்டறிந்துள்ளோம் - இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சொல்கிறார்

Published On 2020-01-29 05:36 GMT   |   Update On 2020-01-29 05:36 GMT
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலககோப்பை போட்டிக்கான முக்கிய வீரர்களை கண்டறிந்து உள்ளதாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறியுள்ளார்.
ஹேமில்டன்:

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான ஐந்து 20 ஓவர் தொடரில் இந்திய அணி முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 3-வது ஆட்டம் ஹேமில்டனில் இன்று நடக்கிறது.

இந்த போட்டி தொடர்பாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஸ்ரேயாஸ் அய்யர் நிலையாக ரன்களை எடுக்கிறார். நெருக்கடிக்கு தகுந்தவாறு எப்படி ஆடுவது என்பதை அறிந்து பொறுப்புடன் செயல்படுகிறார். இது மாதிரியான வீரர்களுக்கு போதுமான வாய்ப்புகளை வழங்கி உள்ளோம். தங்களது திறமையை வெளிப்படுத்துகிறார்கள்.

ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் மேட்ச் வின்னர் ஆவார். அவர் அணிக்கு உதவியாக இருந்து தனது நம்பிக்கையை அதிகரித்துள்ளார். லோகேஷ் ராகுலும் இதே நிலையில் தான் மேட்ச் வின்னராக திகழ்கிறார். இருவரும் சிறந்த வீரர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

3 வடிவிலான போட்டிகளிலும் வீரர்கள் அதிகமான ஆட்டங்களில் விளையாடுவதால் புதிதாக கற்றுக்கொடுப்பதற்கு எதுவும் இல்லை.

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் நடைபெறும் 20 ஓவர் உலககோப்பை போட்டிக்கான முக்கிய வீரர்களை கண்டறிந்து உள்ளோம். ஒவ்வொரு ஆட்டத்திலும் கடைசி நேரம் வரை மாறுதல்கள் இருக்கும். அணி நிர்வாகம் மற்றும் என்னை பொறுத்தவரை முக்கிய வீரர்களை கண்டறிந்து விட்டோம்.



வீரர்களுக்கு காயம் அல்லது பெரிய தோல்வி ஏற்பட்டால் தவிர அணியில் மாற்றம் இருக்காது. உலக கோப்பைக்காக கடந்த செப்டம்பர் மாதம் முதலே அணி நிர்வாகம் சோதனை முறையில் வீரர்களை களம் இறக்கி வருகிறது.

ஸ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர் ஷிவம் துபே உள்பட பலருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News