செய்திகள்
U19 இந்திய அணி வீரர்கள்

U19 உலககோப்பை - இந்தியா அரை இறுதிக்கு தகுதி பெறுமா? ஆஸ்திரேலியாவுடன் நாளை மோதல்

Published On 2020-01-27 12:22 IST   |   Update On 2020-01-27 12:22:00 IST
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.
போட்செஸ்ட்ரூம்:

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

பிரியம் கார்க் தலைமையிலான இந்திய அணி இதில் பங்கேற்று சிறப்பாக ஆடி வருகிறது. 3 லீக் ஆட்டத்திலும் வென்று கால்இறுதிக்கு முன்னேறியது.

தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 90 ரன் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் ஜப்பானை 10 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது ஆட்டத்தில் நியூசிலாந்தை 44 ரன் வித்தியாசத்திலும் தோற்கடித்தது.

நாளை (28-ந்தேதி) நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. நடப்புச்சாம்பியனும், 4 முறை உலக கோப்பையை கைப்பற்றிய அணியுமான இந்தியா அரையிறுதிக்கு நுழையும் ஆர்வத்துடன் இருக்கிறது. ஜெய்ஷ்வால், சக்சேனா, கேப்டன் பிரசித்தம் கார்க்,ரவிபிஷ்னோய், ஆகாஷ் சிங்,அதர்வா, கார்த்திக் தியாகி போன்ற சிறந்த வீரர்கள் இந்திய அணியில் உள்ளனர்.

ஆஸ்திரேலியா தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசிடம் தோற்றது. பின்னர் நைஜீரியா, இங்கிலாந்து அணிகளை வீழ்த்தியது. 3 முறை உலக கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி எல்லா வகையிலும் இந்தியாவுக்கு சவாலாக விளங்கும்.

இந்த ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

29-ந்தேதி நடைபெறும் 2-வது கால்இறுதியில் வெஸ்ட்இண்டீஸ்- நியூசிலாந்து, 30-ந்தேதி நடைபெறும் 3-வது கால்இறுதியில் தென் ஆப்பிரிக்கா- வங்காளம், 31-ந்தேதி நடைபெறும் 4-வது கால்இறுதியில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

Similar News