செய்திகள்
ரஷித் லத்தீப்

உங்களை நீங்களே கேலிக்குள்ளாக்காதீர்கள்: பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மீது முன்னாள் வீரர் காட்டம்

Published On 2019-12-08 12:05 GMT   |   Update On 2019-12-08 12:05 GMT
பாகிஸ்தான் தேசிய அணிக்காக விளையாடிய 16 வயதேயான நசீம் ஷாவை U-19 உலகக்கோப்பை அணியில் சேர்த்ததால், முன்னாள் வீரர் ரஷித் லத்தீப் கடுமையாக சாடியுள்ளார்.
பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது.

பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா அறிமுகம் ஆனார். அவருக்கு 16 வயதே ஆனது. இதனால் ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடிய குறைந்த வயது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

ஆனால், நசீம் ஷாவிற்கு 16 வயது கிடையாது. அவருக்கு கூடுதல் வயது இருக்கும் என விமர்சனம் எழும்பியது. இந்நிலையில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நசீம் ஷா தேசிய அணியில் விளையடிய பின் மீண்டும் U-19 அணிக்கு அழைக்கப்பட்டது குறித்து முன்னாள் வீரர் ரஷித் லத்தீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரஷித் லத்தீப் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் U-19 அணியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். U-19 வீரர்கள் U-16 அணிக்கு செல்கிறார்கள். U-16 To U-13 அதன்பின் U-13-ல் இருந்து அவர்கள் அம்மாக்களின் மடிக்கு திரும்புவார்கள்.

சரியான வயதை தெரிவியுங்கள். முறையற்ற டிப்ளோமா டாக்டர்களால் உங்களுடைய பெருமையை கெடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களை நீங்களே கேள்விக்குள்ளாக்காதீர்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News