செய்திகள்
சவுரவ் கங்குலி

ஒரே தொடரில் இரண்டு பகல்-இரவு போட்டி என்பது கொஞ்சம் கூடுதல்: பிசிசிஐ தலைவர் கங்குலி

Published On 2019-12-08 10:00 GMT   |   Update On 2019-12-08 10:00 GMT
ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு இரண்டு டே-நைட் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என வலியுறுத்திய நிலையில், கங்குலி அதற்கு பதில் அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி 2021-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டி தொடரில் 2 டெஸ்ட் போட்டிகளை பகல்-இரவு ஆட்டமாக நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.

அடுத்த மாதத்தில் (ஜனவரி) ஆஸ்திரேலிய அணி, இந்தியா வந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாட இருக்கிறது. இந்த போட்டி தொடரின்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் பகல்-இரவு டெஸ்ட் போட்டி குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான தனது முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் ஆடிய இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை ருசித்தது. இதனால் ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி பகல்-இரவு டெஸ்டில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், ‘‘ஒவ்வொரு டெஸ்ட் தொடரிலும் ஒரு பகல்-இரவு போட்டியில் விளையாடலாம்’’ என்று யோசனை தெரிவித்து இருந்தார்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2 பகல்-இரவு போட்டியில் விளையாடுமா? என்று கங்குலியிடம் கேட்கப்பட்டதற்கு, ‘‘ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து இது குறித்து அதிகாரபூர்வமாக வேண்டுகோள் எதுவும் வரவில்லை. 4 டெஸ்ட் போட்டி தொடரில் 2 பகல்-இரவு போட்டியில் விளையாடுவது என்பது அதிகமானதாகும். ஒவ்வொரு தொடரிலும் ஒரு பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடலாம்’’ என்று பதிலளித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை நீங்கள் பழிவாங்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறதே? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், ‘‘இதுபோன்ற உண்மைக்கு புறம்பான யூகங்கள் ஏன் கிளம்புகிறது என்று தெரியவில்லை. இத்தகைய யூகங்களுக்கு எல்லாம் என்னிடம் பதில் இல்லை.

நீங்கள் சிறப்பாக செயல்பட்டால் அந்த பதவியில் நீடிப்பீர்கள். நீங்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றால் அந்த இடத்துக்கு இன்னொருவர் வரத்தான் செய்வார். நான் விளையாடிய காலத்திலும் இதுபோல்தான் நடந்தது’’ என்றார்.
Tags:    

Similar News