செய்திகள்
ரோகித் சர்மா

3வது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா சதம் -சரிவிலிருந்து மீண்டது இந்திய அணி

Published On 2019-10-19 09:49 GMT   |   Update On 2019-10-19 09:49 GMT
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா சதமடித்து அணியை சரிவிலிருந்து மீட்டார்.
ராஞ்சி:

இந்தியா - தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்டிலும் இந்தியா அபார வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்கியது.

முதல் இரண்டு போட்டிகளைப் போன்று இந்த போட்டியிலும் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித் சர்மாவும் மயங்க் அகர்வாலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். முதல் போட்டியில் இரட்டைச் சதம் விளாசிய அகர்வால் இந்த ஆட்டத்தில் சோபிக்கவில்லை. அவர் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.

டெஸ்ட் போட்டிகளில் நட்சத்திர ஆட்டக்காரரான புஜாரா ரன்கள் ஏதும் எடுக்காமலேயே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி 12 ரன்களில் அவுட் ஆனார். வெறும் 39 ரன்களில் அணியின் முக்கியமான மூன்று விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.



இதையடுத்து களமிறங்கிய ரகானே, ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அபாரமாக விளையாடிய ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் தனது ஆறாவது சதத்தை பதிவு செய்தார். ரகானேவும் அரை சதம் கடந்தார். 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து திணறிய இந்திய அணியை ரோகித்-ரகானே ஜோடி சரிவில் இருந்து மீட்டது.

இந்திய அணி தற்போது 52 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 108 ரன்களுடனும், ரகானே 74 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.
Tags:    

Similar News