செய்திகள்
டோனி, விராட் கோலி

டோனி நிகழ்த்திய சாதனையை நானும் நிகழ்த்துவேன்- விராட் கோலி நம்பிக்கை

Published On 2019-10-19 05:42 GMT   |   Update On 2019-10-19 05:42 GMT
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி செய்த சாதனையை இந்திய அணிக்காக நானும் நிகழ்த்துவேன் என தற்போதைய கேப்டன் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ராஞ்சி:

கிரிக்கெட் உலகில் தற்போது டி20 போட்டிகள் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அதாவது டெஸ்ட் மற்றும் 50 ஒவர் கிரிக்கெட் போட்டிகளை விட டி20 போட்டிகளை காணவே ரசிகர்கள் ஆர்வம் காண்பிக்கின்றனர். டி20 போட்டிகள் முதலில் ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளில் உள்நாட்டு போட்டிகளாக (கிளப் மேட்சஸ்) விளையாடப்பட்டது. இந்த போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு, ஐசிசியின் கவனத்திற்கு செல்லவே டி20 போட்டிகளை சர்வதேச போட்டியாக அறிவித்தது.

முதன் முதலில் டி20 உலக கோப்பை 2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க நாட்டில் நடைபெற்றது. 12 நாடுகள் பங்குபெற்ற இந்த உலககோப்பை போட்டியில், மகேந்திர சிங் டோனி தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி கோப்பையை வென்றது. அதன் பிறகு 5 முறை டி20 உலக கோப்பை போட்டிகள் நடைபெற்றுள்ளன. ஆனால் இந்திய அணியால் வெற்றியை ருசிக்க முடியவில்லை.

இந்நிலையில், 2007 ஆம் ஆண்டு டி20 கோப்பையை டோனி வென்று சாதனை நிகழ்த்தியது போல, தானும் அடுத்த ஆண்டு (2020) நடைபெற உள்ள டி20 உலக கோப்பையை வென்று சாதனை படைப்பேன் என இந்திய அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இது குறித்து விராட் கோலி கூறுகையில், ‘ஐசிசி நடத்திய முதல் டி20 உலக கோப்பை போட்டிகளிலேயே இந்திய அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பது அறிய இயலாது. மகேந்திர சிங் டோனி தலைமையிலான அணி டி20 உலக கோப்பையை வென்றது போல என் தலைமையிலான அணியும் அடுத்து 2020ம் ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. அவ்வாறு நிகழ்ந்தால் டி20 உலக கோப்பையை கைப்பற்றும் இரண்டாவது இந்திய கேப்டன் என்ற சாதனை என்வசமாகும். 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் மகளிர் டி20 உலக கோப்பையை இந்திய பெண்கள் அணி கைப்பற்றும் என நம்புகிறேன்,’ என தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. 50 ஒவர் போட்டிகளில் 5 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணி ஒருமுறை கூட டி20 உலக கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News