செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி - ஹேண்ட்ஸ்கோம்ப், டர்னர் அதிரடியில் ஆஸ்திரேலியா வெற்றி

Published On 2019-03-10 11:57 GMT   |   Update On 2019-03-10 16:27 GMT
மொகாலில் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் ஹேண்ட்ஸ்கோம்ப், டர்னர் அதிரடியில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. #INDvAUS #Rohitsharma #ShikarDhawan #PeterHandscomb #AshtonTurner
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இதுவரை நடந்த 3 ஆட்டத்தின் முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
 
இந்நிலையில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி மொகாலியில் இன்று நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர்.

இருவரும் முதலில் இருந்தே அதிரடியாக ஆடினர். அதனால் இந்தியாவின் ரன் வேகம் அதிகரித்து வந்தது. இருவரும் எளிதில் அரை சதம் கடந்தனர்.

அணியின் எண்ணிக்கை 193 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா அவுட்டானார். அவர் 92 பந்துகளில் 2 சிக்சர், 7 பவுண்டரியுடன் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் முதல் விக்கெட்டுக்கு ரோகித், தவான் ஜோடி 193 ரன்கள் எடுத்ததும் சாதனையாகும்.



அடுத்து இறங்கிய கே.எல்.ராகுல் தவானுக்கு ஒத்துழைப்பு அளித்தார். ஷிகர் தவான் அதிரடியாக ஆடி சதம் கடந்தார். சிறப்பாக ஆடிய ஷிகர் தவான் 115 பந்துகளில் 3 சிக்சர், 18 பவுண்டரியுடன் 143 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து கே.எல்.ராகுல் 26 ரன்னிலும், விராட் கோலி 7 ரன்னிலும், ரிஷப் பந்த் 36 ரன்னிலும் விஜய்சங்கர் 26 ரன்னிலும் அவுட்டாகினர்.

இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்டும், ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஷான் மார்ஷ் 6 ரன்னில் வெளியேறினார். இதனால் 2 விக்கெட்டுக்கு 12 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

அடுத்து இறங்கிய பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் உஸ்மான் கவாஜாவுடன் இணைந்து நிதானமாக ஆடினார். இருவரும் இணைந்து 192 ரன்கள் சேர்த்தனர். கவாஜா 91 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய மேக்ஸ்வெல் 23 ரன்னில் அவுட்டானார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஹேண்ட்ஸ்கோம்ப் சதமடித்து அசத்தினார். அவர் 117 ரன்களில் வெளியேறினார்.

அவருக்கு அடுத்து இறங்கிய ஆஷ்டன் டர்னர் அதிரடியில் மிரட்டினார். இவர் 43 பந்துகளில் 6 சிக்சர், 5 பவுண்டரியுடன் 84 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இதனால் ஆஸ்திரேலியா அணி 47.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதையடுத்து ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 2-2 என சமனிலை வகிக்கின்றன. #INDvAUS #Rohitsharma #ShikarDhawan #PeterHandscomb #AshtonTurner
Tags:    

Similar News