செய்திகள்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் - 196 ரன்னை சேஸிங் செய்து இலங்கை வரலாறு படைத்தது

Published On 2019-02-23 11:13 GMT   |   Update On 2019-02-23 11:41 GMT
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டில், 196 ரன்களை சேஸிங் செய்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி வரலாறு படைத்துள்ளது. #SAvSL
தென்ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. இலங்கையின் நேர்த்தியான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தென்ஆப்பிரிக்கா 222 ரன்னில் சுருண்டது. தொடக்க வீரர் மார்க்கிராம் 60 ரன்களும், விக்கெட் கீப்பர் டி காக் 86 ரன்களும் சேர்த்தனர். இலங்கை அணி சார்பில் பெர்னாண்டோ, ரஜிதா தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

அதன்பின்னர், இலங்கை முதல் இன்னிங்சை விளையாடியது. தென்ஆப்பிரிக்காவின் ரபாடா பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி 154 ரன்னில் சுருண்டது. விக்கெட் கீப்பர் டிக்வெல்லா தாக்குப்பிடித்து 42 ரன்கள் அடித்தார். ரபாடா 4 விக்கெட்டும், ஆலிவியர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
 
இதையடுத்து, 68 ரன்கள் முன்னிலையுடன் தென்ஆப்பிரிக்கா அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. இலங்கையின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 2-வது இன்னிங்சிலும் தென்ஆப்பிரிக்கா மளமளவென விக்கெட்டுக்களை இழந்தது. டு பிளிசிஸ்-ஐ தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 128 ரன்னில் சுருண்டது. இலங்கை சார்பில் லக்மல் 4 விக்கெட்டும், டி சில்வா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.



தென்ஆப்பிரிக்கா அணி ஒட்டுமொத்தமாக 196 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் இலங்கை அணியின் வெற்றிக்கு 197 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 2 விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இலங்கை அணியின் ஒஷாடா பெர்னாண்டோவும், குசால் மெண்டிசும் பொறுப்புடன் ஆடினர். இருவரும் நிதானமாக ஆடி அரை சதம் கடந்தனர். இறுதியில் 45.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பெர்னாண்டோ 75 ரன்னும், மெண்டிஸ் 84 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
  
இந்த வெற்றி மூலம் தென்ஆப்பிரிக்காவை 2-0 என ஒயிட்வாஷ் செய்துள்ளது இலங்கை அணி. மேலும், தென்ஆப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையையும் இலங்கை அணி படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. #SAvSL
Tags:    

Similar News