செய்திகள்

ஆஸ்திரேலிய அணிக்கு 399 ரன்கள் வெற்றி இலக்கு - ஆரோன் பிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ் அவுட்

Published On 2018-12-29 01:29 GMT   |   Update On 2018-12-29 01:29 GMT
மெல்போர்னின் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணிக்கு 399 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணையித்துள்ளது. #AUSvIND #AaronFinch #MarcusHarris
மெல்போர்ன்:

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா அணி மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் எந்த ஒரு வீரரும்  25 ரன்களை கூட தொடவில்லை. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 66.5 ஓவர்களில் 151 ரன்களில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. பும்ரா 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

292 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பாலோ-ஆன் வழங்கவில்லை. ஒரு வேளை கடைசி நாளில் பேட்டிங் செய்யும் நிலை ஏற்பட்டால் சேசிங் செய்வது மிகவும் கடினம் என்று கருதிய இந்திய அணி நிர்வாகம் 292 ரன்கள் முன்னிலையுடன் தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடுவது என்று முடிவு செய்தது.

ஆனால் 2-வது இன்னிங்ஸ் இந்தியாவுக்கு திருப்திகரமாக அமையவில்லை. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் மிரட்டினார். இந்திய வீரர்கள் மயங்க் அகர்வாலை தவிர, விராட் கோலி, புஜாரா உள்பட முன் வரிசை வீரர்கள் அனைவரும் சொதப்பினார். இந்திய அணி 2-வது இன்னிங்சில் நேற்றைய ஆட்ட நேர முடிவில், 27 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்திருந்தது. மயங்க் அகர்வால் 28 ரன்களுடனும் (79 பந்து, 4 பவுண்டரி), விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இன்று 4-வது நாள் ஆட்டம் துவங்கியதும், அதிரடியாக ஆடிய ரிஷப் பந்த் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். மயங்க் அகர்வால் 42 ரன்களில் வெளியேறினார். ஜடேஜா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 37.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் சேர்த்து இருந்த போது தனது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சின் 292 ரன்கள் முன்னிலையுடன் சேர்த்து இந்திய அணி, 399 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணையித்தது.

இதனைத்தொடர்ந்து இமாலய இலக்குடன் 2-வது இன்னிங்சை துவங்கி ஆஸ்திரேலிய அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பந்து வீச்சுக்கு சாதகமாக மைதானம் மாறியிருப்பதால், இந்த இலக்கை துரத்துவது மிக கடினம். இதனால்,  இந்த ‘பாக்சிங் டே’ டெஸ்டில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியிருக்கிறது. தற்போது வரை ஆஸ்திரேலிய அணி 11 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. #AUSvIND
Tags:    

Similar News