செய்திகள்

2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3

Published On 2018-12-15 10:02 GMT   |   Update On 2018-12-15 10:18 GMT
பெர்த்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி, ரகானேயின் பொறுப்பான ஆட்டத்தால் 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்துள்ளது. #AUSvIND #ViratKohli #AjinkyaRahane
பெர்த்:

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
  
இதற்கிடையே, இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி, பெர்த்தில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணியின் மூன்று வீரர்கள் அரை சதமடித்தனர். இறுதியில், 108.3 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 4 விக்கெட்டுகளும், பும்ரா, உமேஷ் யாதவ், விகாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. துவக்க வீரர் முரளி விஜய் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய லோகேஷ் ராகுல் 2 ரன்களில் வெளியேறினார். இதனால் 8 ரன்களை எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.



அடுத்து புஜாராவுடன் கேப்டன் விராட் கோலி இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடினர். 74 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. 24 ரன்கள் எடுத்த புஜாரா அவுட்டானார்.

அவரை தொடர்ந்து அஜிங்கியா ரகானே களமிறங்கினார். இவரும் விராட் கோலியும் நிதானமாக ஆடினர். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி பவுண்டரிகள் அடித்தனர். இருவரும் சிறப்பாக ஆடி அரை சதமடித்து அசத்தினர்.

இறுதியில், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 3 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்துள்ளது.  விராட் கோலி 82 ரன்களும், ரகானே 51 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியாவை விட இந்தியா இன்னும் 154 ரன்கள் பின்தங்கியுள்ளது. #AUSvIND #ViratKohli #AjinkyaRahane
Tags:    

Similar News