செய்திகள்

காமன்வெல்த் தங்கத்தை தமிழகத்துக்கு அர்ப்பணிக்கிறேன் - சென்னை திரும்பிய பவானிதேவி பேட்டி

Published On 2018-11-27 07:30 GMT   |   Update On 2018-11-27 07:30 GMT
கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு தங்கப் பதக்கத்தை அர்ப்பணிப்பதாக சென்னை திரும்பிய வாள் சண்டை வீராங்கனை பவானிதேவி தெரிவித்தார். #BhavaniDevi

சென்னை:

காமன்வெல்த் வாள் சண்டை போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெராவில் சமீபத்தில் நடந்தது.

இதன் சீனியர் ‘சேபர்’ பிரிவில் பங்கேற்ற சென்னை வீராங்கனை பவானி தேவி தங்கம் வென்றார். இறுதிப்போட்டியில் அவர் இங்கிலாந்து வீராங்கனை எமிராக்சை 15-12 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

இதன்மூலம் காமன் வெல்த் வாள் சண்டையில் சீனியர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை பவானி தேவி படைத்தார்.

தமிழகத்துக்கு பெருமை சேர்த்த அவர் இன்று அதிகாலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் பவானி தேவிக்கு பெற்றோர், நண்பர்கள், பயிற்சியாளர்கள், வீரர், வீராங்கனைகள் பெருமளவில் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

 


சர்வதேச போட்டிகளில் வெல்லும் எனது முதல் தங்கப்பதக்கம் ஆகும். எனவே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அதோடு மட்டுமின்றி இந்தியாவில் இருந்து ஒருவர் வெல்லும் முதல் தங்கப்பதக்கம் ஆகும். அந்த சாதனையும் எனக்கு கிடைத்துள்ளதால் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன்.

கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு இந்த தங்கப் பதக்கத்தை அர்ப்பணிக்கிறேன். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவால் நான் எஸ்.டி.ஏ.டி.யின் எலைட் திட்டத்தில் சேர்க்கப்பட்டேன். இதனால் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவும், வெளிநாடுகளில் பயிற்சி பெறவும் உதவிகரமாக உள்ளது. இதற்கு தமிழக அரசு பெரிதும் உதவி வருகிறது.

தமிழக முதல்-அமைச்சருக்கும், விளையாட்டுத் துறை அதிகாரிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

காமன்வெல்த் தங்கப் பதக்கம், அடுத்த சர்வதேச போட்டிகளில் பங்கேற்க எனக்கு பெரிதும் ஊக்குவிப்பாக உள்ளது. எதிர்வரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு பவானிதேவி கூறினார். #BhavaniDevi

Tags:    

Similar News