செய்திகள்

மழையால் ஆட்டம் பாதிப்பு- இருந்தாலும் டக்வொர்த் விதியின்படி இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

Published On 2018-10-13 12:40 GMT   |   Update On 2018-10-13 12:40 GMT
இலங்கை - இங்கிலாந்து இடையிலான 2-வது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டாலும் இங்கிலாந்து டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி 31 ரன்னில் வெற்றி பெற்றது. #SLvENG
இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 10-ந்தேதி தம்புல்லாவில் முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது.

இங்கிலாந்து அணி 15 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்டது. பலத்த மழை பெய்ததால் ஆட்டம் அத்துடன் வெற்றித் தோல்வியின்றி முடிவிற்கு வந்தது.

இந்நிலையில் 2-வது ஆட்டம் தம்புல்லாவில் இன்று பகல் ஆட்டமாக நடைபெற்றது. இலங்கை அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. ஜோ ரூட் (71), மோர்கன் (92) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து 50 ஒவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் சேர்த்தது. இலங்கை அணி சார்பில் மலிங்கா 10 ஓவரில் 44 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

பின்னர் 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. ஒல்லி ஸ்டோன் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோரின் வேகப்பந்து வீச்சால் இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இலங்கை அணி 31 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. குசால் பெரேரா 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க இலங்கை 5 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்திருந்தது.

6-வது விக்கெட்டுக்கு தனஞ்ஜெயா டி சில்வா உடன் திசாரா பேரேரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. இலங்கை அணி 29 ஓவரில் 140 ரன்கள் அடித்திருக்கும்போது மழை பெய்தது.



கனத்த மழை பெய்ததால் ஆட்டம் அத்துடன் முடிக்கப்பெற்று டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்பட்டது. இதில் இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் ஆட்டம் மழையால் முடிவில்லாமல் போனது. ஆனால், 2-வது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட போதிலும் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இங்கிலாந்து வெற்றி என அறிவிக்கப்பட்டது.

இரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஆட்டம் 17-ந்தேதி பல்லேகலே மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது.
Tags:    

Similar News