செய்திகள்

ஆசிய விளையாட்டில் சாதித்த வீரர்கள், பயிற்சியாளருக்கு ஊக்கத்தொகை - முதல்-அமைச்சர் பழனிசாமி வழங்கினார்

Published On 2018-10-03 22:25 GMT   |   Update On 2018-10-03 22:25 GMT
ஆசிய விளையாட்டில் சாதித்த தமிழகத்தை சேர்ந்த வீரர்கள், பயிற்சியாளருக்கு ரூ.1¼ கோடி ஊக்கத்தொகையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். #AsianGame #EdappadiPalaniswami
சென்னை:

இந்தோனேஷியாவில் சமீபத்தில் நடந்த 18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு ஏற்கனவே முதற்கட்டமாக ஊக்கத்தொகை வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 2-வது கட்டமாக மேலும் சில வீரர்களுக்கும், அவர்களின் பயிற்சியாளர்களுக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆசிய விளையாட்டில் கலப்பு தொடர் ஓட்டம் மற்றும் ஆண்கள் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் வெள்ளிப்பதக்கங்கள் கைப்பற்றிய ஆரோக்ய ராஜீவுக்கு ரூ.60 லட்சம், பெண்களுக்கான ஸ்குவாஷ் அணிகள் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற சுனைனா குருவில்லாவுக்கு ரூ.30 லட்சம், டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்ற பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு ரூ.20 லட்சம், மேலும் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளின் பயிற்சியாளர்களான அஞ்சன் சின்னப்பா, டிம்பிள் மதிவாணன் மற்றும் அமிஷ்வேத் ஆகியோருக்கு ரூ.18 லட்சம் என்று மொத்தம் ரூ.1 கோடியே 28 லட்சத்திற்கான காசோலைகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News