செய்திகள்

அபராதத்தை விரும்பவில்லை- அம்பயரின் மோசமான முடிவுகள் குறித்து டோனி கருத்து

Published On 2018-09-26 08:35 GMT   |   Update On 2018-09-26 08:35 GMT
இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் அம்பயரின் மோசமான முடிவு குறித்து எம்எஸ் டோனி கருத்து தெரிவித்துள்ளார். #AsianCup2018 #INDvAFG #MSDhoni
துபாய்:

ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா- ஆப்கானிஸ்தான் மோதிய பரபரப்பான ஆட்டம் ‘டை’யில் முடிந்தது.

முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 252 ரன் எடுத்தது. தொடக்க வீரர் முகமது ‌ஷசாத் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். ஜடேஜா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், கலீல் அகமது, தீபக் சாஹர், கேதர் ஜாதவ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். 253 ரன் இலக்குடன் இந்தியா விளையாடியது.

தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடினார்கள். ராகுல் 60 ரன்னும், அம்பதி ராயுடு 57 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். 3-வது வீரராக களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் 44 ரன் எடுத்தார். விக்கெட்டுகள் சரிந்ததால் இந்தியா மோசமான நிலைக்கு சென்றது. 205 ரன்னில் 6 விக்கெட்டை இழந்தது. ஜடேஜா அணியை காப்பாற்ற போராடினார். 49-வது ஓவரில் இந்திய அணி 2 விக்கெட்டை பறிகொடுத்தது.

ஆட்டத்தின் கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்டது. ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. ரஷீத்கான் வீசிய கடைசி ஓவரில் முதல் பந்தில் ரன் எடுக்காத ஜடேஜா 2-வது பந்தில் பவுண்டரி அடித்தார். 3-வது மற்றும் 4-வது பந்தில் தலா 1 ரன் கிடைத்தது.

இதனால் ஸ்கோர் சமநிலை ஏற்பட்டது. வெற்றிக்கு 1 ரன் தேவை. 2 பந்து எஞ்சி இருந்தது. 5-வது பந்தில் ஜடேஜா ஆட்டம் இழந்தார். இதனால் பரபரப்பான இந்த ஆட்டம் ‘டை’யில் முடிந்தது.



இந்திய அணி 49.5 ஓவர்களில் 252 ரன் எடுத்து ‘ஆல்அவுட்’ ஆனது. ஜடேஜா 25 ரன் எடுத்தார். அப்தாப் ஆலம், ரஷீத்கான், முகமது நபி தலா 2 விக்கெட்டும், ஜாவித், அகமது தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

ஆப்கானிஸ்தானுடன் மோதிய ஆட்டம் ‘டை’யில் முடிந்தது குறித்து டோனி கூறியதாவது:-

நாங்கள் தோல்வியின் நிலையில் இருந்ததால் ஆட்டம் ‘டை’ ஆனது மோசமில்லை. 5 முதல் 6 ஓவர்களில் எங்களது பேட்டிங் நுணுக்கம் சரியில்லாமல் போனது. அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சு மெய்சிலிர்க்க வைத்தது. ரன்அவுட்டும் பாதிப்பை ஏற்படுத்தியது.

ஆடுகளத்தில் நடந்த சில சம்பவங்களை நான் பேச விரும்பவில்லை. ஏனென்றால் நான் அபராதத்தை சந்திக்க விருப்பமில்லை.

இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

இந்த ஆட்டத்தில் நடுவரின் தீர்ப்பு இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது. டோனி, தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு கொடுக்கப்பட்ட அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரிவியூ தீர்ந்துவிட்டதால் டி.ஆர்.எஸ். முறையை நாட முடியாமல் போனது. #AsianCup2018 #INDvAFG #MSDhoni
Tags:    

Similar News