செய்திகள்

இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி மீண்டும் வெற்றி

Published On 2018-09-13 20:16 GMT   |   Update On 2018-09-13 20:16 GMT
இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #Indian #SriLanka #Cricket #INDvsSL
காலே:

மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் ஐந்து 20 ஓவர் ஆட்டங்கள் கொண்ட போட்டி தொடரில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் போட்டியின் முடிவுகள் பெண்கள் சாம்பியன்ஷிப்புக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படும். காலேவில் நடந்த முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை பெண்கள் அணியை 98 ரன்னில் சுருட்டிய இந்திய பெண்கள் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.



இந்த நிலையில் இந்தியா- இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி காலேவில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 219 ரன்களில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் தானியா பாத்யா 68 ரன்னும், கேப்டன் மிதாலி ராஜ் 52 ரன்னும், ஹேமலதா 35 ரன்னும் எடுத்தனர். முதல் ஆட்டத்தில் அரை சதம் அடித்த ஸ்மிர்தி மந்தனா 14 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். இலங்கை அணி தரப்பில் ஜெயன்கானி 3 விக்கெட்டும், பிரபோத்ஹானி, வீரக்கொடி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி, இந்திய வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 48.1 ஓவர்களில் 212 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஜெயன்கானி 57 ரன்னும், ஸ்ரீவர்தனே 49 ரன்னும், நிலாக்‌ஷி டி சில்வா 31 ரன்னும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி தரப்பில் மான்சி ஜோஷி, ராஜேஸ்வரி கெய்க்வாட் தலா 2 விக்கெட்டும், பூனம் யாதவ், ஷிகா பாண்டே, தீப்தி ஷர்மா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் போட்டி தொடரை கைப்பற்றியது. இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வருகிற 16-ந் தேதி நடக்கிறது.  #Indian #SriLanka #Cricket #INDvsSL
Tags:    

Similar News