செய்திகள்
சாம் குர்ரான்

4-வது டெஸ்ட்- இந்தியாவிற்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து

Published On 2018-09-02 10:34 GMT   |   Update On 2018-09-02 10:34 GMT
சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வரும் 4-வது டெஸ்டில் இந்தியாவின் வெற்றிக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து. #ENGvIND
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து சாம் குர்ரான் (78) மொயீன் அலி ஆகியோரின் ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

அதன்பின் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. புஜாரா 132 ரன்கள் அடித்து கடைசி வரை நிற்கவும், விராட் கோலி 46 ரன்கள் அடிக்கவும் இந்தியா முதல் இன்னிங்சில் 273 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணி சார்பில் மொயீன் அலி 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் 27 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஜோ ரூட் (48), ஜென்னிங்ஸ் (36), பென் ஸ்டோக்ஸ் (30), பட்லர் (69) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்திருந்தது. சாம் குர்ரான் 37 ரன்கள் எடுத்து களத்தில் நின்றிருந்தார். ரஷித் அடில் ஆட்டமிழந்ததும் 3-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.


முகமது ஷமி

இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் பந்தை ஸ்டூவர்ட் சந்தித்தார். முகமது ஷமி பந்து வீசினார். பிராட் முதல் பந்திலேயே விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஜேம்ஸ் ஆண்டர்சன் களம் இறங்கினார். 97-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் சாம் குர்ரான் இரண்டு ரன்கள் எடுக்க முயற்சிக்கையில் ரன்அவுட் ஆனார். இதனால் இங்கிலாந்து 96.1 ஓவரில் 271 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. சாம் குர்ரான் 46 ரன்கள் எடுத்தார்.

முதல் இன்னிங்சில் 27 ரன்கள் பின்தங்கியிருந்ததால், இங்கிலாந்து 244 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 245 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி சார்பில் முகமதுஷமி அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
Tags:    

Similar News