செய்திகள்

அமைதியாக தொடங்கி அதிர வைத்த வாட்சன்

Published On 2018-05-28 07:18 GMT   |   Update On 2018-05-28 07:18 GMT
ஐபிஎல் இறுதிப்போட்டியில் வாட்சன் தொடக்கத்தில் அமைதியாக ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆக்ரோ‌ஷத்துடன் அதிரடியாக விளையாடி சென்னை அணி கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்துள்ளார்.#IPL2018 #CSK #Watson
சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது தடவையாக கோப்பையை வெல்லுமா? என்று ஓட்டு மொத்த சி.எஸ்.கே. ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

கேப்டன் டோனியும் ‘டாஸ்’ வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 179 ரன்னை இலக்காக நிர்ணயித்தது. இந்த ரன்னை சென்னை அணி ‘சேஸ்’ செய்யுமா? என்ற கலக்கம் இருந்தது.

ரஷீத்கான், புவனேஷ்வர்குமார் போன்ற சிறந்த பந்துவீச்சாளர்கள் ஐதராபாத் அணியில் இருப்பதால் இந்த சந்தேகம் ஏற்பட்டது.

அதற்கு ஏற்றவாறு வாட்சனின் ஆட்டம் தொடக்கத்தில் மிகவும் மந்தமாக இருந்தது. புவனேஷ்வர்குமாரின், முதல் ஓவரே மெய்டனாக இருந்தது. தனது 11-வது பந்தில் தான் அவர் பவுண்டரி மூலம் கணக்கை தொடங்கினார். இதனால் ரசிகர்கள் கடுப்படைந்தனர். அணிக்கு ஏற்பட்ட நெருக்கடியில் டுபெலிசிஸ் அதிரடியாக ஆடும் முயற்சியில் ஆட்டம் இழந்தார்.

முதல் 5 ஓவரில் சென்னை அணி 1 விக்கெட்டை இழந்தது. 20 ரன் மட்டுமே எடுத்து இருந்தது. இதனால் எங்கு வெற்றி பெற போகிறது என்ற எண்ணம் எழுந்தது.

அப்போது தான் வாட்சன் தனது பொறுப்பை உணர்ந்து அதிரடியாக ஆட ஆரம்பித்தார். சந்தீப்சர்மா வீசிய ஆட்டத்தின் 6-வது ஓவரில் இருந்து அவரது அதிரடி தொடங்கியது. அந்த ஓவரில் 1 சிக்சர், 1 பவுண்டரி அடித்தார். அவருக்கு ரெய்னா உதவியாக இருந்தார்.

புவனேஷ்வர்குமார், ரஷீத்கான் ஓவரை தவிர மற்ற பந்துவீச்சாளர்களை எல்லாம் வாட்சன் அடித்து நொறுக்கி துவசம் செய்துவிட்டார்.

சந்தீப்சர்மா வீசிய 13-வது ஓவரில் அவர் 2 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட 26 ரன் குவித்தார். 33 பந்தில் அரை சதத்தை (3 பவுண்டரி, 4 சிக்சர்) பூர்த்தி செய்த வாட்சன் 51 பந்தில் சதம் (7 பவுண்டரி, 8 சிக்சர்) 100 எடுத்தார். தொடக்கத்தில் அமைதியாக ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் பின்னர் ஆக்ரோ‌ஷத்துடன் அதிரடியாக விளையாடி சென்னை அணி கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்தார்.

ஆரம்பத்தில் அவரது ஆட்டத்தை பார்த்து வெறுத்து போன ரசிகர்கள் பின்னர் அதிரடியாக ஆடியதை பார்த்து உற்சாகம் அடைந்தனர். வாட்சன் சிக்சர்களும், பவுண்டரிகளுமாய் அடித்து மும்பை வான்கடே மைதான ரசிகர்களுக்கு மட்டுமின்றி, போட்டியை டெலிவிசனில் ரசித்த ரசிகர்களுக்கும் விருந்து படைத்தார்.

117 ரன் குவித்ததன் மூலம் ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். இதற்கு முன்பு விர்த்திமான் சகா 2014-ம் ஆண்டு 115 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது.#IPL2018 #CSK #Watson
Tags:    

Similar News