செய்திகள்

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே இலக்கு: பளுதூக்கும் வீரர் சதீஷ்

Published On 2018-04-19 08:18 GMT   |   Update On 2018-04-19 08:18 GMT
ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே தனது அடுத்த இலக்கு என காமன்வெல்த்தில் தங்கம் வென்ற தமிழக பளு தூக்கும் வீரர் சதீஷ்குமார் கூறியுள்ளார்.
ஆலந்தூர்:

ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் சமீபத்தில் நடந்த காமன் வெல்த் விளையாட்டுப் போட்டியில் தமிழக பளு தூக்கும் வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கம் சென்றார்.

77 கிலோ உடல் எடை பிரிவில் அவர் தங்கம் பெற்றார். 2014-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த்திலும் சதீஷ் தங்கம் வென்று இருந்தார்.

தமிழகத்துக்கு பெருமை சேர்ந்த வேலூரைச் சேர்ந்த 25 வயதான சதீஷ் சிவலிங்கம் இன்று காலை சென்னை திரும்பினார். காமன்வெல்த்தில் தங்கம் வென்ற அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது பெற்றோர், நண்பர்கள், விளையாட்டு வீரர்கள் திரண்டு வரவேற்றனர்.

பின்னர் சதீஷ்குமார் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பதக்கம் வென்ற எனக்கு பரிசு அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் போன்ற விளையாட்டு வீரர்களுக்கு இது உற்சாகத்தை ஏற்படுத்தும். ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே எனது அடுத்த இலக்கு.

இவ்வாறு அவர் கூறினார்.

இதே போல டேபிள் டென்னிஸ் அணிகள் பிரிவில் தங்கம் வென்ற சென்னை வீரர் அமல்ராஜும் திரும்பினார். அவருக்கும் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவரது பெற்றோர் அற்புதராஜ்- மேரி ஸ்டெல்லா மற்றும் உறவினர்கள், டேபிள் டென்னிஸ் வீரர், வீராங்கனைகள் திரண்டு வந்து வரவேற்றனர். அமல்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீண்ட இடைவெளிக்கு பிறகு காமன்வெல்த்தில் தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசின் ஊக்கத்தால் என்னால் தங்கம் வெல்ல முடிந்தது. தமிழக அரசு ஊக்கத் தொகை அறிவித்து உள்ளது. இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடி பதக்கம் வெல்லும் ஆர்வத்துடன் உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

32 வயதான அமல்ராஜ் காமன்வெல்த் போட்டியில் பெறும் 3-வது பதக்கமாகும். 2010-ல் அணிகள் பிரிவில் வெண்கலமும், 2014-ல் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் பெற்று இருந்தார். #commonwealthgames2018
Tags:    

Similar News