செய்திகள்

ஐபிஎல் எதிர்ப்பு போராட்டம் - பாரதிராஜா, வைரமுத்து, சீமான் உள்ளிட்ட 500 பேர் மீது வழக்கு

Published On 2018-04-11 03:32 GMT   |   Update On 2018-04-11 03:32 GMT
சென்னையில் நேற்று ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்திய பாரதிராஜா, வைரமுத்து, சீமான் உள்ளிட்ட 500 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். #CauveryIssue #IPLProtest
சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் அரசியல் கட்சிகள், விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐ.பி.எல். போட்டிகளை தமிழகத்தில் நடத்தக்கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டி நேற்று நடைபெற்றது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணா சாலையில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் தடுப்பு வேலி அமைத்து போராட்டக் காரர்களை மைதானம் நோக்கி செல்ல விடாமல் தடுத்தனர். தடையை மீறி சென்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



போராட்டம் நடத்திய இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர் மற்றும் வைரமுத்து, நாம் தமிழர் கட்சிதலைவர் சீமான், எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்திய பாரதிராஜா, வைரமுத்து, சீமான், தமீமுன் அன்சாரி, கருணாஸ், பி.ஆர்.பாண்டியன் உட்பட 500 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 21 பேர் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். #CauveryIssue #IPLProtest

Tags:    

Similar News