செய்திகள்

லிவர்பூல் மொகமது சாலா நான்கு கோல்கள் அடித்து அசத்தல்

Published On 2018-03-18 19:57 IST   |   Update On 2018-03-18 19:57:00 IST
இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்தில் லிவர்பூல் வீரர் மொகமது சாலா நான்கு கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். #EPL #LiverPool #MohamedSalah
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்தில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் லிவர்பூல் - வாட்ஃபோர்டு அணிகள் மோதின. லிவர்பூல் அணிக்கு சொந்தமான அன்பீல்டு மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது. சொந்த மைதானத்தில் லிவர்பூல் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக முன்னணி வீரர் சாலா அபாரமாக ஆடினார்.

ஆட்டத்தின் 4-வது நிமிடத்தில் சாடியோ மானே கொடுத்த பந்தை மொகமது சாலா கோலாக மாற்றினார். 43-வது நிமிடத்தில் அன்ட்ரிவ் ராபர்ட்சன் கொடுத்த பந்தை கோலாக மாற்றினார். இதனால் முதல் பாதி நேரத்தில் லிவர்பூல் 2-0 என முன்னிலைப் பெற்றது.



2-வது பாதி நேரத்திலும் அந்த அணியே ஆதிக்கம் செலுத்தின. 49-வது நிமிடத்தில் மொகமது சாலா கொடுத்த பந்தை ராபர்ட்டோ ஃபேர்மினோ கோலாக மாற்றினார். அதன்பின் 77 மற்றும் 85-வது நிமிடத்தில் மொகமது சாலா கோல் அடித்தார். இதனால் லிவர்பூல் அணி 5-0 என வெற்றி பெற்றது.

மொகமது சாலா நான்கு கோல்கள் அடித்ததுடன் ஒரு கோல் அடிக்க துணையாகவும் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் 63 புள்ளிகளுடன் லிவர்பூல் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Similar News