செய்திகள்

இங்கிலாந்துக்கு பதிலடி: பிராத்வைட், ஷாய் ஹோப் அசத்தல் சதம்

Published On 2017-08-26 21:28 IST   |   Update On 2017-08-26 21:28:00 IST
ஹெட்டிங்லேயில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பிராத்வைட், ஷாய் ஹோப் சதமடித்து அசத்தியுள்ளனர்.
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் லீட்ஸில் உள்ள ஹெட்டிங்லேயில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 258 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் (100) சதமும், ஜோ ரூட் (59) அரைசதமும் அடித்தனர்.

பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 19 ரன்கள் எடுத்திருந்தது. பிராத்வைட் 13 ரன்னுடனும், பிஷூ 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.


சதம் அடித்த பிராத்வைட், அருகில் ஷாய் ஹோப்

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பிஷூ நேற்றைய ரன்னுடன் ஆண்டர்சன் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கைல் ஹோப் 2 ரன்னில் வெளியேறினார். முதல் மூன்று விக்கெட்டுக்களையும் ஆண்டர்சன் கைப்பற்றினார்.

ஆண்டர்சனின் அபார பந்து வீச்சால் வெஸ்ட் இண்டீஸ் 35 ரன்களுக்குள் 3 விக்கெட்டை இழந்து திணறியது. 4-வது விக்கெட்டுக்கு பிராத் வைட் உடன் ஷாய் ஹோப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இங்கிலாந்தின் பந்து வீச்சை திறமையாக எதிர்கொண்டது.


சதம் அடித்த ஷாய் ஹோப்

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 6 பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். இருவரின் சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி 74 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்துள்ளது. பிராத்வைட் 115 ரன்னுடனும், ஷாய் ஹோப் 104 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

Similar News