செய்திகள்

ரியோவில் இருந்து திரும்பிய இந்திய வீராங்கனை சுதாசிங் ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2016-08-23 11:16 IST   |   Update On 2016-08-23 11:16:00 IST
ரியோவில் இருந்து திரும்பிய இந்திய வீராங்கனை சுதாசிங் காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
பெங்களுர்:

இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனைகளில் ஒருவர் சுதாசிங். பிரேசிலில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இவர் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் பந்தயத்தில் பங்கேற்றார்.

2-வது தகுதி சுற்றில் கலந்து கொண்ட அவர் 9-வது இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார்.

உத்திரபிரதேசத்தை சேர்ந்த சுதாசிங் பிரேசிலில் இருந்தபோதே லேசான உடல்நிலை பாதிக்கப்பட்டார். நாடு திரும்பியதும் அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. காய்ச்சல், உடல் சோர்வால் பாதிக்கப்பட்ட அவர் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பிரேசில் நாட்டில் அனைவரையும் அச்சுறுத்தும் ஜிகா வைரஸ் நோய் உள்ளது. இந்த வைரஸ் சுதாசிங்கையும் தாக்கி இருக்குமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது ரத்த மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஜிகா வைரஸ் இருக்கிறதா என்பதை கண்டறிய இந்த ரத்த சோதனை நடத்தப்படுகிறது. சோதனை முடிந்த பிறகே தெரியவரும்.

சுதாசிங்கை தனி வார்டில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். கர்நாடகா சுகாதார குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருகிறது.

மேலும் ரியோவில் இருந்து திரும்பிய மேலும் 2 தடகள வீராங்கனைகளும் காய்ச்சலுடன் நாடு திரும்பி உள்ளனர்.

ஒ.பி.ஜெய்ஷா (கேரளா), கவிதா ரவூத் (மராட்டியம்) ஆகியோருக்கு காய்ச்சல் இருந்தது. அவர்களின் உடல்நிலை தேறியதால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Similar News