செய்திகள்
கெய்ல் உடன் விராட் கோலி

டி20 ரன் குவிப்பில் கெய்லை முந்தி செல்லும் விராட் கோலி

Published On 2016-05-15 17:02 IST   |   Update On 2016-05-15 17:02:00 IST
தற்போதைய ஐ.பி.எல். தொடரில் விராட் கோலி அபாரமாக விளையாடி வருகிறார். இதுவரை நடந்த 11 போட்டிகளில் 3 சதங்கள் அடித்துள்ளார். இதன்மூலம் இந்த வருட டி20 போட்டிகளில் கெய்லை விட அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

பெங்களூரு:

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனும், இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனும் ஆன விராட் கோலி இந்த வருட தொடக்கத்தில் இருந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தொடர்ந்து 3 அரைசதங்கள் விளாசினார். அதேபோல் வங்காள தேசத்தில் நடைபெற்ற ஆசியக்கோப்பை டி20 தொடரிலும் அபாரமாக விளையாடினார். அதன்பின் டி20 உலகக்கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் நம்பமுடியாத அளவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த ஆண்டு இதுவரை ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் விராட் கோலி 1302 ரன்கள் குவித்துள்ளார். இதனால் விராட் கோலி, கிறிஸ் கெய்லை முந்தியுள்ளார்.

இதற்கு முன் கெய்ல், 2011ம் ஆண்டு 1497 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்தார். 2012ம் ஆண்டு 1532 ரன்னுடனும், 2013ல் 1344 ரன்னுடனும், 2015ல் 1665 ரன்னுடனும் முதலிடத்தை பிடித்தார். இந்த வருடம் இன்னும் 7 மாதங்கள் இருந்தாலும் விராட் கோலி இதே ஆட்டத்தை தொடர்ந்தால் கெய்லால் விராட் கோலியை தொட முடியாது.

Similar News