சிறப்புக் கட்டுரைகள்

ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- பாலச்சந்தரிடம் கேள்வி கேட்ட சிவாஜிராவ்

Published On 2025-09-29 13:00 IST   |   Update On 2025-09-29 13:00:00 IST
  • பேராசிரியர் கோபாலி இன்னொரு தகவலையும் சிவாஜிராவிடம் தெரிவித்தார்.
  • கல்லூரி முதல்வர் ராஜாராம் அவசர அவசரமாக வகுப்பறைக்குள் நுழைந்தார்.

டைரக்டர் பாலச்சந்தர் திரைப்பட கல்லூரிக்கு வருகிறார் என்று பேராசிரியர் கோபாலி சொன்னதும் சிவாஜிராவ் மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பாலச்சந்தர் படங்களை பார்த்த நினைவுகள் அவருக்குள் அலை அலையாக வந்தன.

பெங்களூரில் இருக்கும்போதே சிவாஜிராவ் பல தடவை டைரக்டர் பாலச்சந்தரின் படங்களை பார்த்திருக்கிறார். மேஜர் சந்திர காந்த் படத்தை பார்த்தபிறகு பாலச்சந்தரின் தீவிர ரசிகராக அவர் மாறி இருந்தார். அன்றுமுதல் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பாலச்சந்தர் படங்களை அவர் பார்க்க தவறுவது இல்லை.

1973-ம் ஆண்டு சென்னைக்கு வந்த போது தி.நகர் கிருஷ்ணவேணி தியேட்டரில் அரங்கேற்றம் படத்தை பல தடவை பார்த்தார். அந்த படத்தை பார்த்த போது ஒரு காட்சியில் சிரித்ததும், இன்னொரு காட்சியில் அழுததும் சிவாஜிராவுக்கு நினைவுக்கு வந்தது. அரங்கேற்றம் படம் சிவாஜி ராவ் மனதுக்குள் மிகப்பெரிய பிரமிப்பை ஏற்படுத்தி இருந்தது. ஒவ்வொரு தடவை பார்க்கும் போதும் சிவாஜிராவ் உணர்ச்சி வசப்பட்டு அழுதிருக்கிறார். அந்த படத்தின் காட்சிகளை அவர் நண்பர்களிடம் பேசி விவாதித்தது உண்டு.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் அரங்கேற்றம் படத்தை பார்த்த பிறகு பாலச்சந்தர் மீது சிவாஜிராவுக்கு மரியாதையும், ஒருவித ஈர்ப்பும் ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் 1974-ம் ஆண்டு திரைப்பட கல்லூரி வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருந்தபோது தீபாவளி தினத்தன்று ரிலீசான பாலச்சந்தரின் 'அவள் ஒரு தொடர்கதை' படத்தையும் சிவாஜிராவ் தி.நகர் கிருஷ்ண வேணி தியேட்டரில் பார்த்தார்.

அந்த படம் சிவாஜிராவுக்கு மிகவும் பிடித்துப்போனது. எனவே அடுத்தடுத்து மேலும் 3 தடவை பார்த்தார். 4 தடவை பார்த்த பிறகும் அவருக்குள் மீண்டும் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டே இருந்தது. அந்த படம் பாலச்சந்தரின் மிகப்பெரிய ரசிகனாக சிவாஜி ராவை மாற்றி இருந்தது.

இந்த நிலையில் பாலச்சந்தர் திரைப்பட கல்லூரிக்கு வருகிறார் என்பதை அறிந்ததும், சிவாஜிராவ் மனம் றெக்கை கட்டிப் பறந்தது. நாளை பாலச்சந்தர் சார் வரும்போது எப்படியாவது அவரிடம் பேசிவிட வேண்டும் என்ற எண்ணம் சிவாஜிராவ் மனதுக்குள் தோன்றியது.

அப்போது பேராசிரியர் கோபாலி இன்னொரு தகவலையும் சிவாஜிராவிடம் தெரிவித்தார். நாளை பாலச்சந்தர் தமிழ் வகுப்புக்கு மட்டுமின்றி கன்னட வகுப்புக்கும் வருவார். சிறப்புரை ஆற்றுவார். எனவே அவரது கருத்துக்களை நன்றாக புரிந்து கொள் என்று கூறினார்.

இதைக் கேட்டதும் சிவாஜிராவுக்கு படபடப்பு ஏற்பட்டு விட்டது. பாலச்சந்தரிடம் பேசி அவரது மனதில் எப்படியாவது இடம் பிடித்துவிட வேண்டும் என்று மனது சொல்லியது. எனவே அவர் பேராசிரியர் கோபாலியிடம், 'சார் நாளை எனக்கு எப்படியாவது பாலசந்தருடன் பேசுவதற்கான வாய்ப்பை உருவாக்கி தந்துவிடுங்கள். அவரது படத்தில் நான் நடிக்க வேண்டும்' என்றார்.

அதற்கு பேராசிரியர் கோபாலி, 'நிச்சயம் ஏற்பாடு செய்கிறேன். தயாராக இரு' என்று கூறினார். இதைக் கேட்டதும் சிவாஜிராவுக்கு படபடப்பு மீண்டும் அதிகமாகியது. அதே உணர்வுடன் அவர் அருண் ஓட்டல் தங்கும் அறைக்கு திரும்பினார். அன்று இரவு முழுவதும் அவருக்கு தவிப்பாகவே இருந்தது.

மறுநாள் காலை சிவாஜிராவ் மற்ற மாணவர்கள் அனைவருக்கும் முன்பாக எழுந்து சுறுசுறுப்பாக குளித்து முடித்து கல்லூரிக்கு புறப்பட்டார். மற்ற மாணவர்கள் வருவதற்கு முன்பே முதல் ஆளாக திரைப்பட கல்லூரி வகுப்புக்குள் வந்து அமர்ந்தார். பாலச்சந்தரை பார்க்கும்போது என்ன பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்? என்ற கேள்விகள் சிவாஜிராவ் மனதுக்குள் வந்து வந்து சென்றன. அதற்கு தன்னை தயார் படுத்துவதற்காக சிவாஜி ராவ் ஒத்திகை பார்க்க முடிவு செய்தார்.

உடனடியாக திரைப்படக் கல்லூரி பாத்ரூமுக்குள் சென்று ஒத்திகை பார்த்தார். அந்த அறைக்குள் கண்ணாடி முன் நின்று கொண்டு பாலச்சந்தரிடம் பேசுவதுபோல பேசி ஒத்திகை பார்த்து தன்னை தயார்படுத்திக் கொண்டார். என்றாலும் மனதுக்குள் ஏற்பட்ட ஒருவித பயம் அவருக்குள் நெகிழ்ச்சியாக இருந்து கொண்டிருந்தது. அதில் இருந்து மீண்டு சகஜ நிலைக்கு வருவதற்காக சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்தார். புகையை ஸ்டைலாக ஊதித் தள்ளிய சிவாஜிராவுக்குள் சற்று அமைதியான தன்மை உருவானது. எந்தவித நெருக்கடியும் இல்லாமல் பாலச்சந்தர் சாரிடம் தைரியமாக பேசிவிட வேண்டும் என்று மனதுக்குள் முடிவு செய்து கொண்டார். வாயைத் திறந்து பேசும்போது சிகரெட் புகை வாசம் வந்துவிடுமோ என்ற பயம் ஏற்பட்டது.

உடனடியாக வாயைக் கொப்பளித்தார். மீண்டும் படபடப்பு ஏற்பட்டது. உடனடியாக இன்னொரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார். இப்படி 3, 4 சிகரெட்டுகளை ஊதித் தள்ளினார். கடைசியில் நன்றாக வாய்க் கொப்பளித்து விட்டு வகுப்பறைக்குள் வந்து அமர்ந்தார். அடுத்த சில நிமிடங்களில் பாலச்சந்தர் வந்துவிட்டார் என்று தகவல் வந்தது. சிவாஜிராவுக்கு அவரையும் அறியாமல் வியர்த்துக் கொட்டியது. ராகவேந்திரரை நினைத்துக் கொண்டார். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள அவர் தீவிரமாக முயற்சி செய்தார். அப்போது கல்லூரி முதல்வர் ராஜாராம் அவசர அவசரமாக வகுப்பறைக்குள் நுழைந்தார்.

'உங்கள் அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி சொல்லப்போகிறேன். டைரக்டர் பாலச்சந்தர் தமிழ் வகுப்பை முடித்துவிட்டு வந்துகொண்டிருக்கிறார். உங்கள் வகுப்பில் 20 நிமிடங்கள் பேச உள்ளார். அவர் பேசி முடித்தபிறகு நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்வார்.

சினிமா தொடர்பாக மட்டும் கேள்விகளை கேளுங்கள். அதிலும், உங்கள் வாழ்க்கைக்கு தேவையானதை கேளுங்கள். நீங்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் உங்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பயன் உள்ள வகையில் இருக்க வேண்டும். தயாராக இருங்கள்' என்றார்.

இதைக் கேட்டதும் சிவாஜிராவுக்கு சிலிர்த்தது. அடுத்த நிமிடம் பாலச்சந்தர் அந்த வகுப்பறைக்குள் நுழைந்தார். இதுவரை நாளிதழ்களில் போட்டோவில் மட்டுமே பாலச்சந்தரை சிவாஜிராவ் பார்த்திருக்கிறார். அன்றுதான் முதல்முதலாக மிக அருகில் நின்று பாலச்சந்தரை சிவாஜிராவ் பார்க்கிறார்.

பாலச்சந்தரை பார்க்க பார்க்க சிவாஜிராவுக்கு பிரமிப்பாக இருந்தது. என்ன இவ்வளவு சின்ன பையன் போல் இருக்கிறார்? என்று சிவாஜிராவ் மனதுக்குள் நினைத்துக் கொண்டார். பாலச்சந்தர் சிரித்துக்கொண்டே பேச ஆரம்பித்ததும் சிவாஜிராவ் கண்கள் ஆச்சரியத்தில் மின்னியது. பிரமிப்பில் தன்னையும் மறந்து பாலச்சந்தரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

பாலச்சந்தர் தனது திரைப்பட அனுபவங்களையும், நடிப்புப் பற்றியும் பேசப் பேச சிவாஜிராவ் சிலைபோல மாறிப் போனார். அவரது மனம் பாலச்சந்தர் இயக்கிய பல்வேறு படங்களையும் நினைத்து பார்த்துக் கொண்டே இருந்தது. திரையுலகில் எவ்வளவு வித்தியாசமான ஒரு மனிதரை நாம் சந்தித்து இருக்கிறோம் என்று ஒருவித ஆச்சரியத்தில் மூழ்கி இருந்தார். அடுத்த சிறிது நேரத்தில் பாலச்சந்தரின் பேச்சு நிறைவு பெற்றது. ஒவ்வொரு மாணவராக அழைத்து பெயரை கேட்டார். சிவாஜிராவிடம் கேட்டபோது முதலில் அவருக்கு எதுவும் புரியவில்லை. அந்தளவுக்கு அன்றைய தினம் பாலச்சந்தரை பார்த்து அவர் பிரமிப்பில் மூழ்கிக் கிடந்தார்.

தன்னிடம் ஏதோ கேட்கிறார் என்ற உணர்வு வந்ததும், சுதாரித்துக்கொண்டு என் பெயர் சிவாஜிராவ் என்றார். மாணவர்கள் அறிமுகம் முடிந்ததும், பாலச்சந்தரிடம் கேள்விகள் கேட்கலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஒவ்வொரு மாணவராக கேள்விகளை கேட்டனர்.

அப்போது சிவாஜிராவ் மனதுக்குள், 'நாம் கேட்கும் கேள்வி மிகவும் வித்தியாசமாக இருக்கவேண்டும். அந்த கேள்வியை கேட்டு பாலச்சந்தர் கவனம் நம்மீது திரும்ப வேண்டும்' என்று நினைத்தார்.

அடுத்த சில நிமிடங்களில் சிவாஜிராவுக்கு கேள்வி கேட்கும் வாய்ப்பு வந்தது. சிவாஜிராவ் எழுந்து, 'ஒரு நடிகனிடம் அவனது நடிப்பைத் தவிர வேறு எதை நீங்கள் முக்கியமானதாகக் கருதி எதிர்பார்க்கிறீர்கள்?' என்று கேட்டார். இந்த கேள்வியை சிவாஜிராவ் தனக்கே உரிய பாணியில் மிக மிக வேகமாக கேட்டார். அவரது வாயில் இருந்து வந்து விழுந்த வார்த்தைகள் யாருக்குமே புரியவில்லை. பாலச்சந்தருக்கும் அவர் என்ன கேட்டார் என்பது தெரியவில்லை. உடனே அவர், 'சாரி, புரியவில்லை. மீண்டும் ஒரு தடவை சொல்லுங்கள்' என்றார். உடனே சிவாஜிராவ் தனது கேள்வியை நிறுத்தி நிதானமாக கேட்டார். இதைக் கேட்டதும், பாலச்சந்தருக்கு சிரிப்பு வந்துவிட்டது.

ஏனெனில் சிவாஜிராவ் அந்த கேள்வி கேட்கும்போது கையை ஆட்டி கொஞ்சம் நடிப்பது போலவே பேசினார். அவரது அந்த நடிப்பில் கொஞ்சம் புத்திசாலித்தனம் இருப்பது போல நடந்துகொண்டார். அதனால்தான் அவரைப் பார்த்து பாலச்சந்தர் சிரித்தார். ஒரு நடிகன் ஸ்டுடியோவுக்கு வெளியே நடிக்கக் கூடாது' என்று பாலச்சந்தர் நச்சென பதில் அளித்தார். அவரது இந்த ஒருவரி பதிலில் பல அர்த்தங்கள் பொதிந்து இருந்தன. அந்த பதில் சிவாஜிராவுக்கு மட்டுமல்ல அங்கிருந்த அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

அத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றதாக கூறப்பட்டது. இதனால் பாலச்சந்தர் புறப்படத் தொடங்கினார். அப்போது திடீரென நின்ற அவர் சிவாஜிராவை பார்த்து, 'உன்னுடைய பெயர் என்ன?' என்று கேட்டார். அவர் சிவாஜிராவ் என்று பதில் அளித்தார். பாலச்சந்தர் வகுப்பறையில் இருந்து வெளியேறி தனது கார் நிற்கும் இடம் நோக்கி நடக்கத் தொடங்கினார். பேராசிரியர் கோபாலி அவரை வழியனுப்புவதற்காக உடன் சென்றார். அந்த நேரத்தை பயன் படுத்தி சிவாஜிராவ் பற்றி டைரக்டர் பாலச்சந்தரிடம் பேராசிரியர் கோபாலி ஏதோ சொன்னார்.

அதைக் கேட்டதும் பாலச்சந்தருக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்படியே திரும்பி தூரத்தில் நின்ற சிவாஜிராவை பார்த்தார்.

அதன் பிறகு என்ன நடந்தது என்பதை நாளை பார்க்கலாம்.

Tags:    

Similar News