சிறப்புக் கட்டுரைகள்

கர்ப்பிணி பெண்களுக்கு வரும் தைராய்டு நோய்

Published On 2025-11-08 11:30 IST   |   Update On 2025-11-08 11:30:00 IST
  • தைராய்டு மாத்திரை மற்றும் அயோடின் எடுத்தாலே முன்கழுத்துகழலை நோய் வராமல் தடுக்கலாம்.
  • பிறந்த குழந்தையின் வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருப்பது தைராய்டு ஹார்மோன்.

கர்ப்ப காலத்தில் கருக் குழந்தை வளர்ச்சிக்கு தைராய்டு ஹார்மோன் மிக மிக இன்றியமையாதது. முதல் மூன்று மாதங்கள் தாயின் தைராய்டு சுரப்பையே குழந்தை நம்பியுள்ளது. பிறகு சிறிது சிறிதாக கரு குழந்தையின் தைராய்டு சுரப்பி வேலை செய்யத்தொடங்கும்.

கர்ப்பம் உறுதியான உடனேயே தைராய்டு பரிசோதனை செய்ய வேண்டும்.

ராதா தன்னுடைய முதல் கர்ப்பத்தில் இருக்கிறார். மிகவும் சந்தோஷம் திருமணம் ஆகி முதல் வருடத்திலேயே குழந்தை உண்டானது. மருத்துவரிடம் சென்றதும் கர்ப்பத்தை ஸ்கேனில் உறுதி செய்த பின் ரத்த பரிசோதனை செய்தனர்.

ரிப்போர்ட்ஸ் வந்த பிறகு டாக்டர் அவர்களை வரச் சொல்லி இருந்தார்.

அடுத்த நாள் பரிசோதனை முடிவுகள் வாட்ஸ் அப்பில் வந்துவிட்டன. ராதாவும் அவர் கணவரும் பரிசோதனை முடிவுகளை அவர்களே ஒப்பிட்டு பார்த்து எல்லாமே சரியாக இருக்கிறது என்ற முடிவுக்கு வருகிறார்கள்.

ராதாவும் கணவரும் அவர்களே பரிசோதனை முடிவுகளை பார்த்து விட்டதால், அடுத்த ஸ்கேன் இரண்டு வாரம் கழித்து தானே! அப்போது சென்று டாக்டரை பார்க்கலாம் என்று ஒத்திப்போட்டனர். இரண்டு வாரம் கழித்து மருத்துவரிடம் சென்றனர். ராதாவின் கணவர் " டாக்டர்! ரிசல்ட் எல்லாவற்றையும் நானே பார்த்து விட்டேன். எல்லாமே சரியாகத்தான் இருக்கிறது. நீங்களும் அதை ஒப்புக்கொள்வீர்கள் "என்று நம்புகிறேன்" என்று கூறினார்.

டாக்டர் "மிகவும் வருத்தமாக இருக்கிறது படித்தவர்களே இவ்வாறு செய்கிறீர்கள்! கர்ப்ப காலத்தில் எடுக்கப்படும் ரத்த அளவுகள் முற்றிலும் மாறுபட்டிருக்கும். நீங்கள் பார்க்கும் போது எல்லாம் நார்மல் போல தெரிந்தாலும் இவருக்கு தைராய்டு குறைபாடு உள்ளது. கட்டாயம் தைராய்டு மாத்திரை எடுக்க வேண்டும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை கட்டாயம் தைராய்டு பரிசோதனை செய்ய வேண்டும். பிரசவமான பிறகு மீண்டும் தைராய்டு டெஸ்ட் செய்துவிட்டு தேவைப்பட்டால் தொடரலாம். இல்லை என்றால் நிறுத்திக் கொள்ளலாம் என்று கூறினார்.

ஜெயஸ்ரீ சர்மா


 

டி.எஸ்.ஹெச் சாதாரண ஒருவருக்கு இருப்பதை விட பாதி அளவு தான் கர்ப்பிணிகளுக்கு இருக்க வேண்டும். அந்த அளவுக்கு கர்ப்ப காலத்தில் பரிசோதனை முடிவுகள் மாறுபடும்.

எனவே கர்ப்பகாலத்தில் லேபில் கொடுக்கப்படும் ரிசல்டுகளை பார்த்துவிட்டு நீங்களாகவே முடிவு செய்ய வேண்டாம்.

பிறந்த குழந்தைகளுக்கு வரும் தைராய்டு குறைபாடு

பிறந்த குழந்தையின் வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருப்பது தைராய்டு ஹார்மோன். அதனால் தான் பிறந்த குழந்தைகளுக்கு தைராய்டு பரிசோதனை செய்யப்படுகிறது. பரம்பரை நோயாக ஒரு சில குழந்தைகளுக்கு பிறந்த உடனேயே தைராய்டு குறைபாடு ஏற்படலாம். இதனால் குழந்தையின் அடுத்தடுத்த வளர்ச்சி படிகளான, 'முகம் பார்த்து சிரிப்பது, குப்புற விழுவது, தவழுவது, உட்காருவது, நிற்பது, நடப்பது, வார்த்தைகளை பேசுவது, என்று எல்லாவற்றிலும் தாமதமாகலாம். எனவே பிறந்த குழந்தைகளுக்கு செய்யப்படக்கூடிய முக்கியமான பரிசோதனைகளில் தைராய்டும் ஒன்று.

மெனோபாஸில் வரும் தைராய்டு நோய்

மெனோபாஸ் (மாதவிலக்கு நின்று போகுதல்).அந்த நேரத்திலும் தைராய்டு சுரப்பில் மாற்றம் ஏற்படும். தைராய்டு குறைபாடு ஏற்படும். அதனால் மாதவிலக்கு நின்றவர்கள் ஒருமுறை மருத்துவரிடம் சென்று உடலை முழுமையாக பரிசோதித்து கொள்வது நல்லது. குறைவான சுரப்பு உள்ளவர்கள் தைராய்டு மாத்திரை எடுத்துக் கொண்டால் மனோபாஸ் காலத்தில் வரும் பல பிரச்சனைகளுக்கு அது தீர்வாக இருக்கலாம்.

முன் கழுத்து கழலை கட்டி (காய்ட்டர்) எப்படி வருகிறது?

அயோடின் சத்து குறைபாடு அல்லது தைராய்டு ஹார்மோன் குறைபாட்டால், தைராய்டு சுரப்பி அதிகமாக சுரக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறது. தொடர்ந்து தலைமை சுரப்பியிலிருந்து வரும் "தைராய்டு தூண்டி ஹார்மோன்" தைராய்டு சுரப்பியை மேலும் மேலும் வளரச் செய்து தேவையான அளவு தைராய்டு சுரக்கும்படி கட்டளை இடுகிறது. அதனால் கழுத்தில் தைராய்டு கட்டி காயிட்டர் உருவாகிறது. தைராய்டு மாத்திரை மற்றும் அயோடின் எடுத்தாலே முன்கழுத்துகழலை நோய் வராமல் தடுக்கலாம்.

தைராய்டு இருப்பவர்கள்என்னென்ன உணவுகளை சாப்பிடக்கூடாது? எது சாப்பிடலாம்?

பொதுவாக எல்லோரும் நினைப்பது தைராய்டு வந்து விட்டாலே பெரிய பட்டியலிட்டு இந்த காயெல்லாம் சாப்பிடக்கூடாது என்று.ஆனால் உண்மையில் அப்படி அந்த பட்டியலில் எந்த காயும் இல்லை. ஒரு சில க்ரூஸிபிரஸ் என்று சொல்லக்கூடிய காய் வகைகளை பச்சையாக உண்ணுவது தைராய்டுக்கு ஏற்றதல்ல. எடுத்துக்காட்டாக காலிபிளவர் முட்டைக்கோஸ், புரோக்கலி மற்றும் சோயா உணவுகள். இவற்றை சமைத்து சாப்பிடலாம். இது தவிர எந்த விதமான கடினமான உணவு பத்தியமும் தைராய்டுக்கு தேவை இல்லை.

கடல் சார்ந்த உணவுகளில் அயோடின் இருப்பதால் கடற்கரை பகுதிகளில் இருப்பவர்களுக்கு தைராய்டு நோய் வெகு அரிதாகவே வருகிறது. கடற்கரையை விட்டு விலகி இருப்பவர்களுக்கு முக்கியமாக பாலைவனப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தைராய்டு நோய் அதிகம் வரும். ஒரு சில பாறை உப்புகளில் அயோடின் சத்து இருந்தாலும் மலைப்பகுதியில் வசிப்பவர்களுக்கும் தைராய்டு நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

அதனால்தான் அரசு தைராய்டு சத்தை உப்பில் ஏற்றி உண்ண வேண்டும் என்பதை கட்டாயப்படுத்தி உள்ளது. மேலும் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் பகுதிகளில் நெற்றியில் வைக்க அயோடின் சத்து கலந்த பொட்டுகள் அரசால் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன. அது நெடு நேரம் நெற்றியில் ஒட்டியிருக்கும்போது பெண்களுக்கு தைராய்டு நோய் வருவது தவிர்க்கப்படுகிறது.

பெரும்பாலும் வெகு அரிதாகவே ஏற்படும். மீன் மற்றும் கடல்பாசிகளில் அயோடின் சத்து நிறைந்திருப்பதால் கடல் சார்ந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அயோடின் குறைபாட்டால் வரும் தைராய்டு வருவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு மற்றும் பால் பொருட்களிலும் அயோடின் சத்து நிறைந்துள்ளது.

தைராய்டு மாத்திரையின் பக்க விளைவுகள் என்ன?

தைராய்டு மாத்திரைக்கு பெரியதாக ஒன்றும் பக்கவிளைவுகள் இல்லை. ஆனால் 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது தைராய்டு ரத்த பரிசோதனை செய்து மருத்துவரிடம் காண்பித்து மாத்திரையின் அளவு சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்: 8925764148

Tags:    

Similar News